ராமநாதபுரம் விவசாயிகள் கேரளா சுற்றுப்பயணம்

X

உச்சிப்புளி வட்டார விவசாயிகளுக்கு கேரளாவில் பட்டறிவுப் பயணம்.
ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி வட்டார விவசாயிகளுக்கு கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள கேரள வேளாண் பல்கலைக்கழகத்தில் நாட்டுக்கோழி வளர்ப்பு என்ற தலைப்பில் பயிற்சி வழங்கப்பட்டது. வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமைத் திட்டத்தின் கீழ் வெளிமாநில பட்டறிவுப் பயணம் கடந்த மார்ச் 23ஆம் தேதி உச்சிப்புளி வட்டாரத்தைச் சேர்ந்த 20 விவசாயிகள் பட்டறிவுப் பயணமாக அழைத்துச் செல்லப்பட்டனர். முனைவர் அதுல்யா கால்நடை மருத்துவர் சிறப்புரையாற்றி பேசுகையில் நாட்டுக் கோழி வளர்ப்பு என்பது மிகவும் எளிதான கூடுதல் வருமானம் பெறக் கூடிய தொழிலாகும், நாட்டுக் கோழிகளை சிறிது கவனத்துடன் வளர்த்தல் மிகவும் இலாபகரமான தொழிலாக அமையும், இதன் மூலம் கிராமபுற மக்களின் சுயவேலைவாய்ப்பை பெருக்கவும், வீட்டுப் பெண்களின் தினசரி வருமானத்தை அதிகப்படுத்தவும் முடியும்,மேலும் நாட்டுக்கோழிகளின் இயல்புகள், நாட்டுக்கோழி வளர்ப்பு முறைகள்,தீவன மேலாண்மை, நாட்டுக்கோழிகளை அடைவைத்தல், இளம் குஞ்சுகள் பராமரிப்பு, நாட்டுக்கோழிகளில் நோய்தடுப்பு மேலாண்மை,நாட்டுக்கோழிகளில் குடற்புழு நீக்கம் பற்றிய விளக்கமாக பேசினார். ஒருங்கிணைந்த பண்ணைய ஆராய்ச்சி நிலைய உதவி பேராசிரியர் பிந்து அவர்கள் பேசுகையில் ஆராய்ச்சி நிலைய ஆராய்ச்சி பற்றிய விரிவாக விளக்கி பேசினார் மேலும் வேளாண்மை மற்றும் வேளாண்மை சார்ந்த இணைத்தொழில்களை சூழ்நிலைக்கேற்ப தேர்ந்தெடுத்து மேற்கொள்வதே ஒருங்கிணைந்த பண்ணையம் என்றும் நாட்டுக்கோழியுடன் மீன் வளர்ப்பு,பசுந்தீவன உற்பத்தியை அதிகரிக்க வழி முறைகள்,அசோலா வளர்ப்பு, அசோலாவிலுள்ள சத்துகள், அசோலா உற்பத்தி முறைகள், ஒருங்கிணைந்த பண்ணையத்தில் பசுந்தீவன உற்பத்தி பற்றி விவசாயிகளுக்கு முக்கியத்துவம் குறித்து விளக்கம் அளித்தார். விவசாயிகள் பட்டறிவுப் பயனம் முடிந்து, வெள்ளிக்கிழமை ஊருக்குத் திரும்பினர். இந்தப் பயண ஏற்பாடுகளை உச்சிப்புளி வட்டார வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்ட அலுவலர்கள் செய்தனர்.
Next Story