எம்பி தலைமையில் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

நல்லம்பள்ளியில் நாடாளுமன்ற உறுப்பினர் தலைமையில் திமுகவினர் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
தர்மபுரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில், நல்லம்பள்ளி பேருந்து நிலையத்தில் மாவட்ட பொறுப்பாளர் எம்பி ஆ.மணி தலைமையில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலம் வழங்கக்கூடிய 100 நாள் வேலை திட்டத்திற்கு உரிய தமிழகத்திற்கான 4000 கோடி நிதி ஒதுக்காத மத்திய அரசை கண்டித்து, கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், தமிழகத்தை வஞ்சிக்காதே, நூறுநாள் வேலைக்கான சம்பளத்தை வழங்கு, சம்பள பணத்தை திருதே, பெண்களின் வயிற்றில் அடிக்காதே என மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக ஒன்றிய செயலாளர் சண்முகம் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், பெண்கள் என 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எம்பி ஆ.மணி,தமிழக மக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவியாக இருக்கும் 100 நாளாக வேலை திட்டத்திற்கு கடந்த 4 மாதமாக வழங்க வேண்டிய 4032 கோடி நிதியை வழங்காமல் நிறுத்தி வைத்துள்ளது. அது மட்டுமில்லாமல், புதிய கல்வி கொள்கையில் மும்மொழி கொள்கையை ஏற்க மறுத்ததால், கல்வி துறைக்கு நிதி வழங்கவில்லை. இதனால் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க முடியவில்லை. மேலும் தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகளின் எண்ணிக்கையை குறைக்க திட்டமிட்டுள்ளனர். இதனை தடுக்கும் வகையில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஆளும் கட்சகயினரை அழைத்து ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தை ஏற்படுத்தியுள்ளார். இதில் 25 ஆண்டுகளுக்கு இந்த தொகுதி மறுசீரமைப்பு நிறுத்தி வைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்‌ என தெரிவித்தார். மேலும் தவெக-திமுக போட்டி என விஜய் பேசியது குறித்த கேள்விக்கு, தமிழ்நாட்டில் யார் அரசியல் செய்ய வேண்டும் என்றாலும், திமுகவை எதிர்த்து தான் பேசி வருகிறார்கள். இது 1969-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. திமுகவை எதிர்த்த கட்சிகளின் நிலை, தற்போது என்ன என்பதை எல்லோரும் அறிவர் என எம்பி ஆ.மணி தெரிவித்தார்.
Next Story