மாவட்ட ஆட்சியர் தலைமையில் சிறப்பு கிராம சபை கூட்டம்

அதியமான்கோட்டை பகுதியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ், தலைமையில் நடைபெற்றது
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம், அதியமான்கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு இன்று நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார்கள். இக்கிராம சபைக் கூட்டத்தில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி மற்றும் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. வெங்கடேஷ்வரன் கலந்துகொண்டு, சிறப்பித்தனர். இக்கிராம சபைக்கூட்டத்தில் உலக தண்ணீர் தினத்தின் கருப்பொருளினைப் பற்றி விவாதிக்கப் பட்டதோடு, அதியமான்கோட்டை கிராம ஊராட்சியின் நிர்வாகம் மற்றும் பொது செலவினங்கள், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, சுத்தமான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்தல், RA வரைபடம் (FRA Atlas) சாத்தியமுள்ள கிராமங்களில் கிராம சபா அளவிலான வன உரிமை குழுக்கள் உருவாக்குதல், குழந்தைகள் பாதுகாப்பு, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் பெண் குழந்தைகளுக்காக செயல்படுத்தப்படும் சிறப்பு திட்டங்கள், தொழுநோய் விழிப்புணர்வு, உள்ளிட்ட பல்வேறு பொருண்மைகள் குறித்து விவாதிக்கப்பட்டு, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இச்சிறப்பு கிராம சபைக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ், அவர்கள் கலந்துகொண்டு, பேசும்போது தருமபுரி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 251 ஊராட்சிகளிலும் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு, சிறப்பு கிராம சபைக்கூட்டம் இன்று நடைபெறுகின்றது. இந்த அதியமான்கோட்டை ஊராட்சியில் நடைபெறுகின்ற இச்சிறப்பு கிராம சபைக்கூட்டத்தில் கலந்து கொள்வதில் மிகவும் பெருமகிழ்ச்சி அடைகின்றேன். தண்ணீர் விலை மதிப்பில்லா ஒரு பொருளாகும். நீடித்து நிலைத்து பல ஆண்டுகளுக்கு பயன்படுத்திடும் வகையில் அதனைப் போற்றி பாதுகாத்திட வேண்டும். மழைநீரினை சேகரித்தல், சிக்கனமாக தண்ணீரை பயன்படுத்துதல், மறுசுழற்சிக்கு உட்படுத்துதல், நிலத்தடி நீரை செறிவூட்டுதல், நீர் மாசுபாட்டைத் தடுத்தல், மரம் வளர்த்தலை ஊக்குவித்தல், ஏரி, குளம், கால்வாய்களை தூர்வாரி புனரமைத்தல், நீரின் முக்கியத்துவைத்தை பொதுமக்களிடம் எடுத்து கூறுதல் உள்ளிட்ட பணிகளை நமது கடைபிடித்து, பொதுமக்கள் அனைவரும் நீரின் இன்றியமையாமை குறித்து விழப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும். அனைத்து வீடுகளிலும் மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் அமைத்து மழைநீர் சேகரிப்பதன் மூலம் மண்வளம் மேம்படுவதோடு, நிலத்தடி நீர் மட்டமும் உயரும். பொதுமக்கள் குடிநீரை வீணாக்காமல் பயன்படுத்த வேண்டும். இக்கூட்டத்தில் மண்டல உதவி திட்ட அலுவலர் உமா, தருமபுரி உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) நிர்மல் ரவிக்குமார், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட செயற்பொறியாளர் சிவக்குமார், நல்லம்பள்ளி வட்டாட்சியர் சிவக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலைவாணி, இளங்குமரன் உட்பட அரசுத் துறை அலுவலர்கள், கைம்பெண் நலவாரிய உறுப்பினர் ரேணுகாதேவி, முன்னாள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story