வேளாண்மை கல்லூரி மாணவர்கள் வேளாண் தொழில்நுட்ப செயல்முறை விளக்கங்கள்

வேளாண்மை கல்லூரி மாணவர்கள்
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள நாட்டாணிக்கோட்டை கிராமத்தில் ஆர்.வி.எஸ் வேளாண்மை கல்லூரி மாணவர்கள், பேராவூரணி வட்டாரத்தில் கடந்த நாற்பது நாட்களாக தங்கி கிராமப்புற பயிற்சி பெற்று வருகின்றனர்.  இந்நிலையில் கடந்த 24.03.2025 அன்று நாட்டாணிக்கோட்டை கிராமத்தைச் சோ்ந்த பூமிநாதன் என்பவரின் விவசாய நிலத்தில் சாறு உறுஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்தும் விதமாக இஞ்சி, பூண்டு மற்றும் மிளகாய் கரைசல் தயார் செய்யும் செயல்முறைகள் மற்றும் தெளிக்கும் முறைகளை விவசாயிகளுக்கு விளக்கினர்.   நாட்டாணிக்கோட்டை கிராமத்தில் தென்னை அதிக அளவில் சாகுபடி செய்யும் நிலையில் தென்னையில் வரும் சுருள் வெள்ளை ஈ கட்டுப்படுத்த மைதா மாவு கரைசல் தயாரிக்கும் விதம் மற்றும் தெளிக்கும் முறைகள் பற்றி எடுத்துரைத்தனர்.  மேலும் தென்னையை தாக்கும் காண்டாமிருக வண்டினை கட்டுப்படுத்த நாப்தலின் உருண்டை, மணல் கலவை முறைகள் மற்றும் இனக்கவர்ச்சி பொறி, கோணி ஊசி கொண்டு குத்தி எடுக்கும் முறைகள் பற்றியும் விவசாயிகளுக்கு செய்து காண்பிக்கப்பட்டது.  மேலும் நெல், உளுந்து, கடலை, காய்கறி மற்றும் பழப் பயிர்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் தேமோர் கரைசல் தயாரிக்கும் முறை செய்து காண்பிக்கப்பட்டது. இந்த செயல் விளக்கத்தின் பொழுது வேளாண்துறை அலுவலர்கள் மற்றும் நாட்டாணிக்கோட்டை விவசாயிகள் பங்குகொண்டு பயன்பெற்றனர்.
Next Story