தூர்வாரும் பணிகளை தலைப்பிலிருந்தே தொடங்க வேண்டும் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

X

விவசாயிகள் குறைதீர் கூட்டம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் தூர்வாரும் பணிகளை வாய்க்கால், வடிகாலின் தலைப்பிலிருந்தே தொடங்க வேண்டும் என குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தி்னர். தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் குறை தீர் கூட்டம் வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை, கூட்டுறவுத்துறை, நீர்வள ஆதாரத்துறை உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் பேசியது: கல்லணைக் கால்வாய் புரனமைப்புத் திட்டத்துக்கு நடப்பு நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. அதே போல் தஞ்சாவூர் மாவட்டத்தில் வேளாண் அறிவியல் ஆராய்ச்சி மையம் தொடங்குவது குறித்து அறிவிப்பு ஏதும் இல்லை. எனவே இந்த சட்டமன்ற கூட்டத் தொடரில், 110 விதியின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். பட்டுக்கோட்டை வட்டத்தில் பொன்னவராயன்கோட்டை வழியாக நரசிங்கபுரம் வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்கால் தூர்வார ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வாய்க்காலின் தலைப்பில் தூர்வாராமல், நடுபகுதியில் தூர்வாருவதால் எந்த பயனும் இல்லை. இதே போன்று தான் மாவட்டத்தில் பல வாய்க்கால்களும் தலைப்பிலிருந்து தூர்வாராமல், பிற பகுதியில் தூர்வாருவதால் எந்த பயனும் இல்லை. தூர்வாரும் பணியை காலதாமதம் இல்லாமல் உடன் தொடங்க வேண்டும். தற்போது மாவட்டம் முழுவதும் கோடை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதற்கு தேவையான மின்சாரம் தடையில்லாமல் வழங்க வேண்டும்.கடந்த டிசம்பர் மாதம் பெய்த பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் இதுவரை வழங்கவில்லை. ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிவாரணமும் பல விவசாயிகளுக்கு விடுபட்டுள்ளது. அதை முறைப்படுத்தி வழங்க வேண்டும். வங்கிகளில் நகைக் கடன் வாங்கிய விவசாயிகள் அசல், வட்டி இரண்டையும் திரும்ப கட்ட வேண்டும் என வங்கியாளர்கள் நிர்பந்தம் செய்கின்றனர். ஏற்கெனவே வழங்கப்பட்ட கடன் முறையை போன்று வழங்க வேண்டும். பூதலூர் பகுதியில் உள்ள வெண்ணாறு, பிள்ளைவாய்க்கால், ஓடைவாய்க்கால் போன்ற வாய்க்கால்களில் நெய்வேலி காட்டாமணக்கு, ஆகாயத்தாமரை, சீமைக்கருவேல மரங்கள் அதிகமாக உள்ளது, அதனை அகற்ற வேண்டும். மாவட்டத்தில் பனை மரங்கள் அதிகமாக உள்ளதால், அந்த மரங்களை நம்பியுள்ள தொழிலாளர்களுக்கு உதவிடும் வகையில் பதநீர், கள் இறக்க முறையான அனுமதி வழங்க வேண்டும். மாவட்டத்தில் மரவள்ளி கிழங்கு சாகுபடி அதிகமாக உள்ளது. ஆனால் உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, அரசே கொள்முதல் செய்ய வேண்டும். விவசாயிகள் பெரும் பதிவேடு திட்டத்தினை மேலும் ஒரு மாத காலம் நீட்டிக்க வேண்டும். இந்த திட்டத்தில் குத்தகை சாகுபடி செய்பவர்களையும் இணைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து பேசினர். விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் அவ்வப்போது பதிலளித்து பேசினார்.
Next Story