கோடை காலத்தில் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்

X

கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் பிருந்தாதேவி பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்
உலக தண்ணீர் தினத்தையொட்டி சேலம் மாவட்டத்தில் உள்ள 385 ஊராட்சிகளில் நேற்று கிராமசபை கூட்டம் நடைபெற்றது. வீராணம் ஊராட்சியில் நடந்த கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி பார்வையாளராக கலந்து கொண்டார். இதில் ஊராட்சிகளின் வரவு, செலவு கணக்குகள் மற்றும் புதிதாக மேற்கொள்ளப்படும் வளர்ச்சி திட்டப்பணிகள் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது. மேலும் மழைநீர் சேகரித்தல், சிக்கனமாக தண்ணீரை பயன்படுத்துதல், உடைந்த குழாய்களை சரிசெய்து தண்ணீரை வீணாகாமல் பாதுகாத்தல், நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி புனரமைத்தல் உள்ளிட்டவை குறித்தும் விவாதிக்கப்பட்டன. இந்த கூட்டத்தில் கலெக்டர் பிருந்தாதேவி பேசியதாவது:- இந்தாண்டு உலக தண்ணீர் தினத்தை 'பனிப்பாறை பாதுகாப்பு' என்கிற சிறப்பு கருப்பொருளை அடிப்படையாக கொண்டு கிராமசபை கூட்டம் நடத்தப்படுகிறது. குறிப்பாக 2024-25-ம் நிதியாண்டிற்கு தீண்டாமை கடைபிடிக்காத மற்றும் நல்லிணக்கத்துடன் வாழும் கிராமமாக வீராணம் ஊராட்சி தேர்வு செய்யப்பட்டு ரூ.10 லட்சம் நிதியாக வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதியை, ஊராட்சியில் குடிநீர் வசதி, சாலை வசதி, புதிய மின்விளக்குகள் அமைத்தல் மற்றும் பள்ளி, குழந்தைகள் நலமைய கட்டிடம் கட்டுவதற்கும், கால்நடைகளுக்கு தண்ணீர் தொட்டி கட்டுவதற்கும் பயன்படுத்தி கொள்ளலாம். கோடை காலத்தில் பொதுமக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். 'வீடுதோறும் குடிநீர் வழங்கப்பட்ட ஊராட்சி' என்ற நிலைக்கு மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளை உறுதி செய்ய வேண்டும். கிராம ஊராட்சியில் உள்ள பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், அரசு பொது கட்டிடங்கள் அனைத்திலும் குழாய் இணைப்புகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும். கிராமசபை கூட்டங்களில் 'முழு எழுத்தறிவு பெற்ற நகர, கிராம பஞ்சாயத்து' என்ற இலக்கை அடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறித்தும், அனைத்து வீடுகளுக்கும் 100 சதவீத குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது குறித்தும் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. இவ்வாறு அவர் பேசினார்.
Next Story