டாட்டா ஏசி வாகனத்தில் மீன் பெட்டிக்கு அடியில் ரூ.ஒரு லட்சம் மதுபான பாட்டில்கள் நூதன கடத்தல்
நாகையை அடுத்த புத்தூர் ரவுண்டானா அருகே, திருச்சி மண்டல மத்திய நுண்ணறிவு போலீசார், நேற்று முன்தினம் இரவு அந்த வழியாக வந்த ஒரு டாட்டா ஏசி வாகனத்தை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். சோதனையில். வாகனத்தினுள் பெட்டி பெட்டியாக மீன்களுக்கு அடியில் மதுபான பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த போலீசார், காரைக்கால் மதுபான பாட்டில்களை கடத்தி வந்த நபரிடம் நடத்திய விசாரணையில், தஞ்சை மாவட்டம் ஓரத்தநாடு பொய்யுன்டார் கோட்டையை சேர்ந்த, நாகராஜ் மகன் திராவிடச் செல்வன் என்பது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார், மீன் பெட்டியில் இருந்த ரூ.ஒரு லட்சம் மதிப்பிலான மதுபான பாட்டில்கள், மீன்கள் மற்றும் டாட்டா ஏசி வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். பின்னர், திருச்சி மண்டல மத்திய நுண்ணறிவு போலீசார், பறிமுதல் செய்த பொருட்களை, நாகை நகர போலீசாரிடம் ஒப்படைத்தனர். இது குறித்து, நாகை நகர போலீசார் வழக்கு பதிவு செய்து, திராவிடச் செல்வனை கைது செய்து மதுபான பாட்டில்கள், மீன்கள், டாட்டா ஏசி வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
Next Story




