கோவை: கோவை வழியாக வாராந்திர சிறப்பு ரெயில் !

X

கோவை வழியாக பெங்களூரு திருவனந்தபுரம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
கோவை வழியாக வருகிற 4-ம் தேதி முதல் பெங்களூரு திருவனந்தபுரம் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இது குறித்து தென் இந்திய ரெயில்வே இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, கோடைகாலத்தில் பயணிகள் நெரிசலை தவிர்க்க கூடுதல் ரெயில்கள் இயக்கப்படுகிறது. அதன்படி பெங்களூரு- திருவனந்தபுரம் வாராந்திர ரெயில் (எண்: 06555) வெள்ளிக்கிழமை தோறும் பெங்களூருவில் இருந்து புறப்படுகிறது. அதன்படி வருகிற 4-ம் தேதி மற்றும், 11, 18, 25, மே மாதம் 2, 9, 16, 23, 30 ஆகிய தேதிகளில் இரவு 10 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்பட்டு மறுநாள் பகல் 2 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடைகிறது. இதேபோல் திருவனந்தபுரம்- பெங்களூரு வாராந்திர ரெயில் (எண்: 06556) பகல் 2.15 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை தோறும் புறப்படுகிறது. வருகிற 6-ம் தேதி மற்றும் 13, 20, 27, மே 4, 11, 18, 25, ஜூன் 1-ம் தேதி ஆகிய நாட்களில் புறப்பட்டு, மறுநாள் காலை 7.30 மணிக்கு பெங்களூரு சென்றடைகிறது. பெங்களூருவில் இருந்து புறப்படும் ரெயில் போத்தனூருக்கு காலை 6.10 மணிக்கு வந்து 6.15 மணிக்கு புறப்படுகிறது. திருவனந்தபுரத்தில் இருந்து வரும்போது போத்தனூருக்கு இரவு 10.58 மணிக்கு வந்து 11 மணிக்கு புறப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story