ஆண்டிமடம் அருகே சின்னாத்து குறிச்சி பள்ளி ஆண்டு விழா

X

ஆண்டிமடம் அருகே சின்னாத்து குறிச்சி பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது.
அரியலூர் மார்ச்.30- அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் ஒன்றியம், சின்னாத்துக்குறிச்சி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், ஆண்டு விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. பள்ளி மாணவர்களின் தமிழ்த்தாய் வாழ்த்துடன் ஆண்டு விழா தொடங்கியது. ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி ஆண்டிமடம் வட்டார வள மைய மேற்பார்வையாளர் அருமைராஜ் தலைமை வகித்தார். பள்ளியின் பொறுப்பு தலைமையாசிரியர் ராஜதுரை முன்னிலை வகித்தார். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பாவாடைராயன் , பள்ளி மேலாண்மை குழு தலைவர் ஜான்சி ஆனந்த் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.முன் பருவக் கல்வி ஆசிரியர் லெட்சுமி, பள்ளி எமிஸ் ஒருங்கிணைப்பாளர் மகேஸ்வரி, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக விழாவிற்கு வருகை புரிந்த அனைவரையும் வரவேற்று பள்ளி ஆசிரியை ஜெயபாரதி வரவேற்புரை. நிகழ்த்தினார். அடுத்து விழாவிற்கு வருகை புரிந்த பட்டதாரிஆசிரியர் பசுபதி அனைவருக்கும் புத்தகம் நினைவு பரிசாக வழங்கினார்.பட்டதாரி ஆசிரியர் சரளா பானு ஆண்டறிக்கை வாசித்தார்.அடுத்த நிகழ்வாக தலைமை விருந்தினரான ஆண்டிமடம் வட்டார வளமைய மேற்பார்வையாளர் அருமைராஜ் தலைமையுரை ஆற்றினார்,அவர் பேசுகையில் மாணவர்கள் சேர்க்கை பற்றியும், அரசு பள்ளிகளில் தினமும் ஆயிரக்கணக்கில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறுவதை அறியும் பொழுது மிகவும் பெருமையாக இருப்பதையும் சுட்டிக்காட்டினார். சின்னாத்து குறிச்சியில் பயிலும் மாணவ மாணவிகள் சிறப்புற படித்து வருவதையும் பொதுவாக தனியார் பள்ளியில் பயிலும் குழந்தைகள் இடையில் அரசு பள்ளிகளில் சேருகின்ற போது அவர்களது கல்வியானது பின் தங்கிய நிலையிலையே உள்ளது எனவும், பெற்றோர்கள் முதல் வகுப்பில் இருந்தே அரசு பள்ளிகளில் சேருங்கள். அரசு பள்ளிகளே மாணவ செல்வங்களின் கற்றல் செயல்பாடுகளுக்கு என்றுமே ஆணிவேராக இருப்பதுடன் பிற்காலத்தில் அவர்கள் பெரிய பதவி அடையவும் வழிகாட்டுகின்றது என்றும் அறிவுறுத்தினார். பெற்றோர்கள் அரசு பள்ளிகளே என்றும் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உற்ற துணையாகிறது என்ற விழிப்புணர்வு உரை ஆற்றினார்.அரசுப்பள்ளி தமிழ் வழிக்கல்வியில் பயின்றால் மாணவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமைய தமிழ் வழி கல்விக்கு வேலைவாய்ப்பில் 20 விழுக்காடு முன்னுரிமை, மருத்துவம் பொறியியல்துறை,வேளாண்துறை போன்ற உயர்கல்வியில் பலவற்றிற்கும் 7.5 விழுக்காடு ஒதுக்கீடு போன்ற பல புதிய திட்டங்களை அரசானது அறிவித்துக் கொண்டே உள்ளது. பெற்றோர்களே இவற்றை தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள் எனவும் அறிவுறுத்தினார். பேரறிஞர் பிளேட்டோ அவர்களின் கூற்றுப்படி கல்வி ஏழைகளுக்கு செல்வம், செல்வர்களுக்கு அணிகலன், வீட்டிற்கு விளக்கு, நாட்டிற்கு நன்மை, பெண்களுக்கு பாதுகாப்பு இவ்வளவு சிறந்த கல்வி என்ற காரணத்தினால் தான் படிக்காமல் இருப்பதை விட பிறக்காமல் இருப்பதே மேல் என்று கூறினார். எனவே பெற்றோர்களே தங்கள் பள்ளி வயது குழந்தைகளை பள்ளியில் சேருங்கள், அரசுப்பள்ளியில் சேருங்கள் என்று பெற்றோர்களுக்கு கோரிக்கை வைத்தார். மேலும் அரசு பள்ளியில் படித்தவர்கள் பெரிய பெரிய பதவிகளை அலங்கரித்து கொண்டு சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர் விஞ்ஞானிகளாகவும், மாவட்ட ஆட்சித் தலைவர்களாகவும், மருத்துவர்களாகவும் உள்ளனர் என்றும் கூறினார்.மேலும் இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் மீது மிகுந்த அக்கறையுடன் கல்வி கற்பிக்கக் கூடியவர்கள். மிகவும் திறமையானவர்கள் என்றும் பாராட்டினார்.பள்ளி மேலாண்மை குழு தலைவர் பேசும்போது ஆசிரியர்களின் பணிகளை பாராட்டியும் தொடர்ந்து இப்பள்ளியில் மாணவர்களை சேர்ப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும் கூறினார். விளையாட்டு போட்டி, பேச்சுப்போட்டி, திருக்குறள் ஒப்புவித்தல், கலை திருவிழா போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றிபெற்ற மாணவ மாணவிகள் அனைவருக்கும் மேற்பார்வையாளர் அருமைராஜ் , முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாவாடைராயன், மேலாண்மை குழு தலைவர் ஜான்சி ஆனந்த், தலைமையாசிரியர் ராஜதுரை, ஆசிரியர்கள் திரு பசுபதி, சரளாபானு, அடைக்கல மேரி, ஜெயபாரதி மற்றும் சோபியா மேரி ஆகியோர் பரிசு பொருட்கள் வழங்கி மகிழ்ந்தனர். மாணவச் செல்வங்களின் பரதநாட்டியம், நாடகம், நடனம், கலைநிகிழ்ச்சிகளை மாணவர்களின் பெற்றோர்கள் ஊர் பொதுமக்கள் என பெருந்திரளாக வருகை புரிந்து கண்டு களித்தனர்.பள்ளி ஆசிரியர் சோபியா மேரி நன்றி கூறினார்.
Next Story