செகந்திராபாத் - இராமநாதபுரம், திருநெல்வேலி - எழும்பூர் விரைவு ரயில்களை மீண்டும் இயக்கக் கோரிக்கை

X

ரயில் சேவை
திருவாரூர் - பட்டுக்கோட்டை காரைக்குடி ரயில் பாதையில் செகந்திராபாத்- இராமநாதபுரம் மற்றும் திருநெல்வேலி -எழும்பூர் வாரந்திர சிறப்பு விரைவு ரயில்களை மீண்டும் தொடர்ந்து இயக்க வேண்டும் என பட்டுக்கோட்டை ரயில் உபயோகிப்போர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. திருவாரூர் - பட்டுக்கோட்டை - காரைக்குடி ரயில் பாதையில் இயங்கி வந்த செகந்திராபாத்- ராமநாதபுரம் வாராந்திர சிறப்பு விரைவு ரயில் (07695/07696) மற்றும் திருநெல்வேலி - எழும்பூர் வாராந்திர சிறப்பு விரைவு ரயில் (06070/06069) ஆகிய 2 ரயில்களையும் மீண்டும் நீடித்து இயக்க வேண்டும் என பட்டுக்கோட்டை ரயில் உபயோகிப்போர் சங்கத்தின் தலைவர் வ.விவேகானந்தம், துணைத்தலைவர் வே.இராமலிங்கம், செயலாளர் கு.முகேஷ், துணைச் செயலாளர் ப.ஆத்மநாதன், பொருளாளர் ஈகா வைத்தியநாதன் ஆகியோர் மத்திய ரயில்வே அமைச்சர், ரயில்வே வாரியத் தலைவர், தென் மத்திய ரயில்வே பொது மேலாளர், தெற்கு ரயில்வே பொது மேலாளர், திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் ஆகியோருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர் அந்த கோரிக்கை மனுவில் "தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில், எழும்பூர் ரயில் நிலையம் மிகவும் முக்கியமான இடமாகும். இங்கிருந்து சென்னையின் முக்கிய இடங்களுக்கு மிக எளிதாக அனைவரும் சென்று வர முடியும். தற்போது திருவாரூர் - பட்டுக்கோட்டை - காரைக்குடி ரயில் பாதை வழியாக வாரம் மும்முறை இயங்கி வரும் தாம்பரம் - செங்கோட்டை - தாம்பரம் அதி விரைவு ரயில் (20683/20684) செங்கோட்டையில் இருந்து தாம்பரம் வரை செல்கிறது அதுபோல வருகிற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி அன்று துவக்கி வைக்கப்பட இருக்கும் ராமேஸ்வரம்- தாம்பரம் - பாம்பன் விரைவு ரயிலும் தாம்பரம் வரை மட்டுமே இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் - பட்டுக்கோட்டை - காரைக்குடி ரயில் பாதையில் எழும்பூருக்கு செல்ல செகந்திராபாத் - இராமநாதபுரம் விரைவு ரயில் மற்றும் திருநெல்வேலி - சென்னை விரைவு ரயிலும், எழும்பூருக்கு சென்று வர மிகவும் உபயோகமாக இருந்து வந்தன. திருநெல்வேலி - சென்னை எழும்பூர் வாராந்திர சிறப்பு விரைவு ரயில் அண்மையில் தொடர்ந்து இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டது. அதேபோல செகந்திராபாத்- இராமநாதபுரம் வாராந்திர சிறப்பு விரைவு ரயில் 28.03.2025 வெள்ளிக்கிழமையுடன் நிறுத்தப்பட்டுள்ளது. செகந்திராபாத் - இராமநாதபுரம் சிறப்பு விரைவு ரயில் செகந்திராபாத்தில் இருந்து வாரந்தோறும் புதன்கிழமை இரவு 09.10 மணிக்கு புறப்பட்டு, சென்னை எழும்பூருக்கு வியாழக்கிழமை காலை 11. 20 மணிக்கு வந்தடைந்து தொடர்ந்து, மறுபடி புறப்பட்டு வியாழன் இரவு 9.15 மணிக்கு இராமநாதபுரத்தை அடைகிறது மீண்டும் இந்த ரயில் இராமநாதபுரத்தில் வெள்ளிக்கிழமை காலை 9.50 மணிக்கு புறப்பட்டு வெள்ளி இரவு 10.10 மணிக்கு எழும்பூருக்கு வந்தடைந்து, அங்கிருந்து புறப்பட்டு சனிக்கிழமை மதியம் 12:50 மணிக்கு செகந்திராபாத்திற்கு சென்றடைந்தது. இந்த ரயில், அகல ரயில் பாதை அமைக்கப்பட்ட பிறகு திருவாரூர் - காரைக்குடி - பட்டுக்கோட்டை ரயில் பாதையில் செகந்திராபாத்தில் இருந்து சென்னை எழும்பூர் வழியாக ராமேஸ்வரத்திற்கு முதன்முதலாக (24.08.2022) இயக்கப்பட்ட ரயில் ஆகும் செகந்திராபாத் மற்றும் ஹைதராபாத் பகுதிகளில் அதிக அளவில் உள்ள தகவல் தொழில்நுட்ப பூங்காக்களில் சென்னை மற்றும் தமிழகத்தின் இதர பகுதிகள் இருந்து அதிகமாக அளவில் பணி செய்து வருகிறார்கள். இவர்கள் இப்பகுதிக்கு சென்று வர இந்த ரயில் மிகவும் உபயோகமாக இருந்து வந்தது. மேலும், செகந்திராபாத், ஹைதராபாத், சென்னை போன்ற பகுதிகளில் இருந்து ராமேஸ்வரத்திற்கு ஆன்மீக யாத்திரையாக வந்து இரவு தங்கி, தரிசனம் முடித்து காலையில் புறப்பட்டு பகல் நேரத்தில் சென்னை மற்றும் செகந்திராபாத் திற்கு திரும்பி பயணம் செய்ய வசதியாக இருந்தது. மேலும் இராமேஸ்வரம், இராமநாதபுரம், காரைக்குடி, திருவாரூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி போன்ற பகுதிகளில் இருந்து பகல் நேரத்தில் பெண்கள் குடும்பத்துடன் சென்று வரவும், மற்ற பயணிகள் எளிதாக சென்று வரவும் பகல் நேர விரைவு ரயிலாக இந்த ரயில் இயங்கி வந்தது. எனவே, செகந்திராபாத்தில் இருந்து சென்னை எழும்பூர் - பட்டுக்கோட்டை வழியாக ராமேஸ்வரத்திற்கு இந்த விரைவு ரயிலை தொடர்ந்து வாரம் இருமுறை மீண்டும் இயக்க வேண்டுகிறோம். அதுபோல திருநெல்வேலி, திருச்செந்தூர் மற்றும் எழும்பூருக்கு சென்று வர திருநெல்வேலி எழும்பூர் சிறப்பு விரைவு ரயிலையும் (06070/06069)தொடர்ந்து இயக்க வேண்டுகிறோம் இதனால் இப்பகுதி மக்கள் சென்னை எழும்பூருக்கும், செகந்திராபாத், ஹைதராபாத், ராமேஸ்வரம் , திருநெல்வேலி போன்ற பகுதிகளுக்கு எளிதில் சென்று வர பயனுள்ளதாக இருக்கும்" இவ்வாறு கோரிக்கை மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Next Story