அரசுப் பள்ளியில் கணினிகள், வீடியோ ப்ரொஜெக்டர் கருவிகளுக்கு பாதுகாப்பற்ற சூழல்... மழையால் நனைந்து வீணாகும் நிலை... தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா...?

அரசுப் பள்ளி அவலம்
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை தாலுகா பரக்கலக்கோட்டையில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு 6 ஆசிரியர்கள் பணியில் உள்ளனர். 100-க்கும் மேற்பட்ட குழந்தைகளும் கல்வி பயின்று வருகின்றனர். இங்குள்ள பள்ளி வளாகத்தில் தனியாக கணினி அறை ஒன்று உள்ளது. தமிழக அரசின் உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகம் மாணவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ளது. இந்த அறையில் சுமார் ரூ.10 லட்சம் மதிப்பிலான கணினிகளும், ஒரு லட்சம் மதிப்புள்ள வீடியோ ப்ரொஜெக்டர் கருவியும் மாணவர்களுக்காக வழங்கப்பட்டுள்ளது. இந்த கணினி அறையின் மேற்கூரை பழுதடைந்து மழை பெய்யும் காலங்களில் உள்ளே தண்ணீர் ஒழுகுவதால் எலக்ட்ரானிக் பொருட்களுக்கு பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு தொடர்ந்து கனமழை பெய்ததால் கட்டிடத்தின் மேலே தார்ப்பாய் போட்டு மூடப்பட்டு கணினிகள் பாதுகாக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது அறையின் மேல் தகர சீட்டு அமைக்கப்பட்டு உள்ளது. இருந்த போதிலும் கணினி உள்ளிட்ட மாணவர்களின் கல்வி பயிலும் சாதனங்கள் மழையினால் சேதமடையாத வகையில், பழுதடைந்துள்ள மேற்கூறையை சரி செய்து நிரந்தரமாக மேல் புறத்தில் தகரக் கொட்டகை அமைத்து தருமாறு, பள்ளி மேலாண்மைக் குழு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், கலை நிகழ்ச்சிகள் நடத்த ஒரு கலையரங்கமும் தமிழ்நாடு அரசு அமைத்து தர வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள், பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். தஞ்சை மாவட்ட நிர்வாகமும் இதை கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
Next Story