சுற்றுலா மேம்பாட்டுப் பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு

X

கொடைக்கானல் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள சுற்றுலா மேம்பாட்டுப் பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கோடை விழா 2025 முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக பல்வேறு பகுதிகளில் சுற்றுலா மேம்பாட்டுப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது :- கொடைக்கானல் பேருந்து நிலையம் அருகில் 1 ஏக்கர் பரப்பளவில் சுமார் 100 வாகனங்கள் நிறுத்தும் வகையில் நகராட்சித்துறை சார்பில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் ஒருவார காலத்தில் முடிவடையும் தருவாயில் உள்ளது. இதனால் கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் போக்குவரத்து இடையூறு ஏற்படாத வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அப்சர்வேட்ரி, ரோஸ் கார்டன் எதிர்புறம், பிரையண்ட் பார்க் ரோடு ஆகிய பகுதிகளில் சாலையோர வாகனம் நிறுத்துமிடங்கள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலியான இடங்களில் தற்காலிக சாலையோர வாகனம் நிறுத்தம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. காவல்துறையின் சார்பில் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் ஒருவழி பாதையில் வாகனங்கள் செல்லும் வகையில் மாதிரி ஒருவழி பாதை ஏற்படுத்தப்பட்டது. இதன் மூலம் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து கிடைத்த கருத்துக்களின் அடிப்படையில் தற்போதுள்ள நடைமுறை தொடர்ந்து மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும், ரோஸ் கார்டன், பிரையண்ட் பார்க் ஆகிய பகுதிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து துறை சார்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார். இந்த ஆய்வின்போது, கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியர் திருநாவுக்கரசு, கொடைக்கானல் நகராட்சி ஆணையாளர் சத்யநாதன், துணை காவல் கண்காணிப்பாளர் மதுமிதா, கொடைக்கானல் வட்டாட்சியர் பாபு, உதவி இயக்குநர்(நெடுஞ்சாலைத்துறை) ராஜன் உட்பட பலர் உடனிருந்தனர்கள்.
Next Story