சாய்வான ஆபத்தான நிலையில் மின்கம்பம் : மின்வாரியம் நடவடிக்கை எடுக்குமா?

X
நாசரேத் அருகே சாய்வான ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை மின்வாரியம் உடனடியாக சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் அருகே வெள்ளரிக்காய்யூரணியிலிருந்து கடையனோடை செல்லும் பிரதான மெயின் ரோட்டில் மின் கம்பங்கள் சரிந்து காணப்படுகின்றன. இதனால் இந்த மின்கம்பத்தில் இருந்து மின் கம்பிகளும் தாழ்வாக செல்கிறது. ஒருசில இடங்களில் வாழை மரங்களில் உரசிக் கொண்டும், மற்றொரு பக்கம் தரையைத் தொடும் நிலையில் காற்றடிக்கும் போது இதிலிருந்து தீப்பொறி பறக்கிறது. இதனால் இவ்வழியாக செல்லும் பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். நாசரேத்தில் இருந்து தென்திருப்பேரை குரங்கணி, ஏரல் வழியாக தூத்துக்குடி செல்லும் அனைத்து போக்குவரத்து வாகனங்களும் இவ்வழியாகத் தான் தினந்தோறும் சென்று வருகிறது. மேலும் கடையனோடையிலிருந்து நாசரேத் கல்லூரி மற்றும் பள்ளிகளில் படிக்கச் செல்லும் மாணவர்கள் பொதுமக்கள் என பல்வேறு தரப்பட்ட மக்களும் அவ்வழியாக அச்சத்துடன் கடந்து செல்கின்றனர். இதன் அருகே கொம்பு மாடசாமி திருக்கோவில் உள்ளது. வருகிற மாதம் இக்கோயிலில் கொடை விழா நடைபெற உள்ளது. இதற்கு வெளியிடங்களில் இருந்து அதிக மக்கள் வருவார்கள். எனவே சம்மந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் விபரிதம் ஏதும் நடக்கும் முன்னதாக துரிதமாக நடவடிக்கை எடுத்து சாய்ந்த நிலையில் உள்ள இந்த மின்கம்பத்தையும், தாழ்வாகச் செல்லும் மின்கம்பிகளையும் உயர்த்தி சரி செய்ய வேண்டும் என இப்பகுதியில் உள்ள மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story

