பரமத்தியில் திருநங்கைகள் திருநம்பிகள் தின விழா கொண்டாட்டம்.

X

நாமக்கல் மாவட்டம், பரமத்தியில் அகில உலக திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள் தின விழா நடைபெற்றது. 100-க்கும் மேற்பட்ட திருநங்கைகள், தனித்திறமைகள் மற்றும் நாடகம் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.
பரமத்தி வேலூர், மார்ச். 31: நாமக்கல் மாவட்டம் பரமத்தி மாவுரெட்டி பகுதியில் உள்ள தொண்டு நிறுவனம் சார்பில்(NEW DAWN ), அகில உலக திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள் தின விழா பரமத்தியில் நடைபெற்றது. திருநங்கைகளும் பாலின சமத்துவமும் என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், திருச்சி, திருச்சிலுவை கன்னியர் இல்லம், மாகாண தலைவி அருட்சகோதரி. அடைக்கலசாமி தலைமை வகித்தார். தொண்டு நிறுவனம் சார்பில், திருநங்கைகளுக்கான சுயதொழில் செய்வதற்கான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மேலும், சுயதொழில் செய்துவரும் திருநங்கைகளுக்கு, விருதுகள் வழங்கி பாராட்டு தெரிவித்தனர். அப்போது, பரமத்தி காவல் ஆய்வாளர் இந்திராணி, காவல்துறை சார்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள, காவல் உதவி செயலி குறித்து செயல்முறை விளக்கம் அளித்தார். ஆண்கள், பெண்கள், திருநங்கைகள் உள்ளிட்டோர் காவல் உதவி செயலியை தங்களது அலைபேசிகளில் பதிவிறக்கம் செய்து கொண்டனர். அப்போது கூறிய அவர், காவல்துறை மற்றும் உங்கள் உறவினர்கள் உங்களுடன் எப்பொழுதும் உறுதுணையாக இருப்பதற்காக இந்த செயலி அமைந்துள்ளது. திருநங்கைகள், ஆண்கள், பெண்கள் உள்ளிட்ட அனைவரும் இந்த செயலியை தங்கள் அலைபேசிகளில் பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். தொடர்ந்து, நாமக்கல் அரங்க நிகழ்த்துநர் திருநங்கை ரேவதி என்பவர் நடித்த திருநங்கைகள் குறித்த ஓரங்க நாடகம் நடைபெற்றது. நாமக்கல் சமூக செயற்பாட்டாளர் திருநங்கைகளின் தலைவி டாக்டர் K. அருணா நாயக் பேசிய போது மத்திய அரசு திருநங்கைகளுக்கான மசோதாவை திருச்செங்கோட்டில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் சிலையின் புராணம் கூறும் அடிப்படையில் தான் கொண்டுவந்துள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 448 திருநங்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.பிற மாவட்டங்களை காட்டிலும் இந்த மாவட்டத்தில்தான் பெரும்பாலான திருநங்கைகள் சுயதொழில் செய்து வருகின்றனர். உணர்வும் என்ற புத்தகம் முதன்முதலில் திருநங்கைகளுக்காக தோழி எழுதினார். அரசு கொள்கை விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது அதில் ஒரு சதவீதம் திருநங்கைகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படும் என எதிர்பார்க்கின்றோம். அனைவரும் நல்ல வேலைகளுக்கு சென்று தங்கள் வாழ்க்கை தரத்தையும் பொருளாதாரத்தையும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மேலும் பள்ளி மாணவ மாணவிகள் திருநங்கைகள் ஆகியோர் பங்கேற்ற, ஆடை அலங்கார அணிவகுப்பு நடனம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் தனித்தனியே நடைபெற்றன. ஆடை அலங்கார அணிவகுப்பு, கலை நிகழ்ச்சிகள், நாடகம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. திருநங்கை குந்தவை சிறந்த அழகியாக தேர்வு செய்யப்பட்டு பரிசுகள், வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நாமக்கல் சமூக செயற்பாட்டாளர்/ திருநங்கைகளின் தலைவி டாக்டர் K. அருணா நாயக், தொண்டு நிறுவன நிறுவனர் அருட்சகோதரி அல்போன்ஸ் ராஜ், அருட் சகோதரி பரிமளா சேவியர், Dr. A. காஜா மொஹைதின், M. வடிவு நாயக், ஆல்கா B. ஆரோன், ஒருங்கிணைப்பாளர் C. சுவேதா சுதாகர், நாமக்கல் மாவட்ட திருநங்கைகள், திருநம்பிகள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
Next Story