ரம்ஜான் பண்டிகையையொட்டி ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

X

உற்சாகமாக படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்
இயற்கை எழில் கொஞ்சும் ஏற்காட்டிற்கு தமிழகம் மட்டும் அல்லாமல் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, பாண்டிச்சேரி போன்ற வெளிமாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். ரம்ஜான் விடுமுறையான நேற்று ஏற்காட்டுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்தது. காலை நேரத்தில் வெயில் சுட்டெரித்தாலும், மதியத்திற்கு மேல் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது. குளிர்ந்த சீதோஷ்ண நிலையை கண்டு மகிழ்ச்சி அடைந்த சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். ஏற்காட்டில் உள்ள சுற்றுலா தலங்களான குகைகோவில், பக்கோடா பாயிண்ட், லேடிஸ் சீட், ஜென்ஸ் சீட், ரோஸ் கார்டன் போன்ற பல்வேறு இடங்களுக்கு சென்று உற்சாகமாக பொழுதை கழித்தனர். ஏற்காட்டில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்ததால் ஏற்காட்டில் உள்ள பெரும்பாலான தங்கும் விடுதிகள் சுற்றுலா பயணிகளால் நிரம்பி காணப்பட்டது. மேலும் படகு இல்லத்தில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக சுற்றுலா பயணிகள் காத்திருந்து படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். மதிய நேரத்தில் ஒண்டிக்கடை ரவுண்டானா பகுதியில் உள்ள உணவகங்களில் கூட்டம் அலைமோதியது. மேலும் ஏற்காட்டில் உள்ள அண்ணா பூங்காவில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் ரசித்து சென்றனர். மேலும் படகு இல்லத்தில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படகு சவாரி செய்தனர். ஏற்காட்டில் சுற்றுலா பயணி வருகை அதிகரித்ததால் மாலை நேரத்தில் சாலையோர கடைகளில் மிளகாய் பஜ்ஜி, ஸ்வீட் கான் போன்ற தின்பண்டங்களின் வியாபாரம் சூடு பிடித்தது.
Next Story