பிரதமர் மோடி தமிழகம் வருகை... கருப்புக் கொடி போராட்டத்தை அறிவித்த விவசாய சங்கத்தினர்!

பிரதமர் மோடி தமிழகம் வருகை... கருப்புக் கொடி போராட்டத்தை அறிவித்த விவசாய சங்கத்தினர்!
X
ஏப்ரல் 6ம் தேதி தமிழகம் வருகை தரும் பிரதமருக்கு கருப்புக்கொடி போராட்டத்தை நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
இது குறித்து, நாராயணசாமி நாயுடுவின், தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் நாமக்கல் வேலுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது..... மத்திய பாஜக அரசு 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் கொடுத்த வாக்குறுதியாகிய நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் உற்பத்தி செய்த விளை பொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலை (எம்எஸ்பி) அமல் படுத்தப்படும் என்று கூறியும் விவசாயிகளின் வருமானம் 2022 க்குள் இரட்டிப்பாக்கப்படும் என்று பாரத பிரதமர் மோடி பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பேசி வாக்குறுதி அளித்தார். விவசாயிகளுக்காக பாஜக அளித்த வாக்குறுதி எதுவும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. கடந்த மாதம் பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் எம்எஸ்பியை அறிவிக்கக் கோரி நாடு முழுவதும் உள்ள விவசாய சங்க அமைப்புகளின் தலைவர்களை, மத்திய அரசு தரப்பில் பேச்சு வார்த்தைக்கு அழைத்தது. பின்னர் பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டாத நிலையில், அடுத்த சுற்று பேச்சு வார்த்தை ஏப்ரல் 4 ந் தேதி நடைபெறும் என அறிவித்துவிட்டு, பேச்சு வார்த்தை முடிந்து வெளியே வந்த விவசாய சங்க அமைப்புகளின் தலைவர்களையும் மற்றும் பஞ்சாப் மாநில எல்லை பகுதியில் நீண்ட காலமாக போராடி வந்த விவசாயிகளின் மீது மத்திய அரசு அடக்குமுறையை கையாண்டு கைது செய்தது.
நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் உற்பத்தி செய்த விளை பொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலையான எம்எஸ்பியை அமுல் படுத்தாமல் விவசாயிகளுக்கு விரோதமாக செயல்பட்டு வரும் மத்திய பாஜக அரசை கண்டிக்கும் வகையில், வருகிற ஏப்ரல் 6 ந் தேதி பாம்பன் பாலத்தை திறந்து வைக்க, தமிழகம் வருகை தரும் பாரத பிரதமர் மோடிக்கு, நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் தலைமையில், தமிழகத்தில் உள்ள விவசாயிகள் அனைவரையும் மிகப் பெரியளவில் ஒன்று திரட்டி கருப்பு கொடி காட்டப்படும் என கூறப்பட்டுள்ளது.
Next Story