பணம் பறிப்பு

X
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் பகுதி சேர்ந்தவர் பக்ருதீன் (39). இவர் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த வடக்கு பேட்டை, அத்தாணி ரோட்டில் உள்ள ஒரு மளிகை கடையில் வேலை பார்த்து வந்தார். ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு ஊருக்கு செல்வதற்காக பக்ருதீன் நேற்று இரவு வேலை முடித்து சம்பள பணம் ரூ.20 ஆயிரம் பணத்துடன் சத்தியமங்கலம் பஸ் நிலையத்திற்கு வந்தார். பின்னர் பக்ருதீன் அங்குள்ள கழிப்பறைக்கு சென்றார். அவரை நோட்டமிட்டு அவர் பின்னால் 4 பேர் சென்றனர். திடீரென அவர்கள் கழிப்பறைக்குள் வைத்து பக்ருதீனை மிரட்டி அவரிடம் இருந்த ரூ.20 ஆயிரம் பணத்தை பறித்துக் கொண்டனர். பின்னர் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். நடந்த சம்பவம் குறித்து பக்ருதீன் சத்தியமங்கலம் போலீசில் புகார் அளித்தார்.அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து அந்தப் பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக சுற்றித்திரிந்த 4 நபர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.போலீஸ் விசாரணையில் அவர்கள் சத்தியமங்கலம், சின்ன பள்ளிவாசல் பின்புறம், போயர் மேற்கு வீதியைச் சேர்ந்த சாதிக் (21), அதே பகுதியை சேர்ந்த பிரபு (25), வடக்குப்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஸ்ரீநாத் (22), பவானி அத்தானியைச் சேர்ந்த மணிகண்டன் (29) ஆகிய 4 பேரும் சேர்ந்து பக்ருதீனை விரட்டி பணம் பறித்தது தெரிய வந்தது. அவர்களிடமிருந்து ரூ.19,800 மற்றும் மூன்று இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர். இவர்கள் வேறு யாரிடமும் இதே போல் கைவரிசை காட்டியுள்ளார்களா என்ற ரீதியிலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

