யானையல் பரபரப்பு

யானையல் பரபரப்பு
X
ஆசனூர் அருகே இரவில் சுற்றுலா பயணிகள் சென்ற காரை துரத்திய ஒற்றை யானையால் பரபரப்பு
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, சிறுத்தை, புலி, கரடி, மான் உள்பட ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் கடுமையான வெயில் தாக்கம் காரணமாக வரட்சியான சூழ்நிலை நிலவுகிறது. வனப்பகுதியில் உள்ள நீர்நிலைகள் குளம் குட்டைகள் வற்ற தொடங்கியுள்ளதால் வனவிலங்குகள் உணவு தண்ணீரை தேடி சாலையோரம் வருவது, ஊருக்குள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்துவது தொடர்கதையாகி வருகிறது. கடந்த சில நாட்களாகவே அடர்ந்த வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானைகள் சத்தியமங்கலம், திம்பம் சாலை நடுவே நின்று வாகனங்களை வழிமறித்து வருவது அதிக அளவில் நடந்து வருகிறது. இந்நிலையில் தொடர் விடுமுறை என்பதால் ஆசனூர் வழியாக கர்நாடகா மாநிலத்திற்கு செல்கின்ற வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்து வருகிறது. நேற்று இரவு ஆசனூர் அடுத்த காரபள்ளம் அருகே சுற்றுலாப் பயணிகள் ஒரு காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வனப்பகுதியை விட்டு வெளியேறி வந்த ஒற்றை யானை திடீரென சுற்றுலா பயணிகள் சென்ற காரை துரத்த ஆரம்பித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த காரில் சென்ற பயணிகள் பயத்தில் கூச்சலிட்டனர். ஓட்டுநர் காரை வேகமாக இயக்கியதால் அந்த ஒற்றை யானை மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. இதனால் காரில் சென்ற சுற்றுலா பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இது குறித்து வாகன ஓட்டிகள் கூறும்போது, தற்போது வனப்பகுதியில் உள்ள சாலையில் யானையும் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக இரவு நேரத்தில் யானைகள் நடமாட்டம் அதிகளவில் இருப்பதால் வனத்துறையினர் இந்தப் பகுதியில் ரோந்து பணி தீவிரப்படுத்தி பட்டாசுகளை வெடித்து யானைகளை விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story