பாலிடெக்னிக் டிப்ளமா பயின்றோர் தொழில்பயிற்சியுடன் கூடிய பிஇ-க்கு விண்ணப்பிக்கலாம்:  அண்ணா பல்கலை.

பாலிடெக்னிக் டிப்ளமா பயின்றோர் தொழில்பயிற்சியுடன் கூடிய பிஇ-க்கு விண்ணப்பிக்கலாம்:  அண்ணா பல்கலை.
X
பாலிடெக்னிக் டிப்ளமா படித்த மாணவர்கள் தொழில்பயிற்சியுடன் கூடிய பி.இ. படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இந்தப் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு மாதம்தோறும் ரூ.12 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் காஞ்சிபுரம் உறுப்பு பொறியியல் கல்லூரியில் எச்.எல். மண்டோ ஆனந்த் இந்தியா நிறுவனத்தின் முழு உதவியுடன் பி.இ. எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் என்ற தொழில்பயிற்சியுடன் கூடிய பொறியியல் படிப்பு வழங்கப்படுகிறது. இந்த 4 ஆண்டு கால பட்டப் படிப்பில் பாலிடெக்னிக் டிப்ளமா ( எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ், இசிஇ, மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, ஆட்டோ மொபைல்) முடித்தவர்கள் சேரலாம். டிப்ளமா படிப்பில் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண் அவசியம். இப்படிப்பில் சேரும் மாணவர்களுக்கு படிக்கும் போதே தொழில் பயிற்சியுடன் மாதம் தோறும் ரூ.12 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும். அதோடு கல்விக்கட்டணம், உணவு, போக்குவரத்து , மருத்துக் காப்பீடு ஆகிய அனைத்து செலவுகளையும் எச்.எல். மண்டோ ஆனந்த் இந்தியா நிறுவனமே ஏற்றுக்கொள்ளும். தற்போது 2025-2026 கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் ஜெ.பிரகாஷ் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: அண்ணா பல்கலைக்கழகத்தின் காஞ்சிபுரம் உறுப்பு பொறியியல் கல்லூரியில் வரும் கல்வி ஆண்டில் (2025-2026) ஒருங்கிணைந்த பயிற்சியுடன் கூடிய பி.இ. எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் படிப்பில் சேர ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்காக cfa.annauniv.edu/cfa என்ற இணையதளத்தை பயன்படுத்தி விண்ணப்பிக்க வேண்டும். நடப்பு கல்வி ஆண்டில் (2024-205) டிப்ளமா படிப்பை முடிக்கும் மாணவர்கள் மட்டுமின்றி கடந்த 2022, 2023, 2024- ம் ஆண்டுகளில் படித்து முடித்தவர்களும் இதற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவராவர். டிப்ளமா மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஏப்ரல் 1-ம் தேதி (இன்று) தொடங்கியுள்ளது. விண்ணப்ப கட்டணம் செலுத்துவது, சான்றிதழ்களை ஆன்லைனில் பதிவேற்றுவது ஆகிய பணிகளை ஏப்ரல் 4 முதல் மேற்கொள்ளலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் ஜுன் 30-ம் தேதி ஆகும். கூடுதல் விவரங்களை மேலே குறிப்பிடப்பட்ட இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம் என அவர் கூறியுள்ளார்.
Next Story