சோதனை அடிப்படையில் தஞ்சையில் மெகா நெல் கொள்முதல் நிலையம்: பேரவையில் அமைச்சர் தகவல்

சோதனை அடிப்படையில் தஞ்சையில் மெகா நெல் கொள்முதல் நிலையம்: பேரவையில் அமைச்சர் தகவல்
X
தஞ்சாவூரில் ரூ.1.41 கோடியில் மெகா நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டு, இப்போது சோதனை அடிப்படையில் செயல்படுகிறது. இனிவரும் காலங்களில் நெல் அதிகம் விளையும் பகுதிகளில் மெகா நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார்.
பேரவையில் இன்று (ஏப்.1) ஆரணி எம்எல்ஏ. சேவூர் எஸ்.ராமச்சந்திரன் பேசுகையில், “ஆரணி ஊராட்சி ஒன்றியம், ஆதனூர் ஊராட்சியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படுமா?” என கேள்வி எழுப்பினார். அதற்கு உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி பதிலளித்து பேசியதாவது: “உறுப்பினர் கேட்ட இடத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைப்பதற்கான தேவை எழவில்லை. மேலும், மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழு ஆய்வு செய்து அளிக்கும் அறிக்கை அடிப்படையில்தான் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படுகிறது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்தாண்டு கூடுதலாக 425 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் கூடுதலாக 7 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. தஞ்சாவூரில் ரூ.1.41 கோடியில் மெகா நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டு, இப்போது சோதனை அடிப்படையில் செயல்படுகிறது. நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் மூலம் தினமும் 20 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யலாம். மெகா நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் 200 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய முடியும். தானியங்கி முறையில் நெல் உலர்த்தப்படும். அரைக்கப்பட்ட அரிசி கன்வேயர் பெல்ட் மூலம் நேரடியாக லாரிகளுக்கு கொண்டு செல்லப்படும். இனிவரும் காலங்களில் நெல் அதிகம் விளையும் பகுதிகளில் மெகா நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
Next Story