பெரம்பலூர் ஆட்சியரை கண்டித்து சிவகங்கையில் ஆர்ப்பாட்டம்

X

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரை கண்டித்து சிவகங்கையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
பெரம்பலூர் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை ஊழியர்களின் வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்க மாநில நிர்வாகிகள் மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் பாஸ்கரன் உள்ளிட்டோர் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து முறையீடு அளிப்பதற்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆட்சியர் அலுவலகம் சென்றுள்ளனர். அவர்களிடம், அநாகரிகமான வார்த்தைகளைப் பிரயோகித்து ஆட்சியர் கிரேஸ் லால்ரின்டிகி பச்சாவ் அவமதித்ததாக கூறப்படுகிறது. மேலும், கோரிக்கை மனுக்களை கொஞ்சமும் நாகரிகமின்றி மாநில நிர்வாகிகள் முன்னிலையிலேயே கசக்கி குப்பைத் தொட்டியில் வீசி, வெளியே செல்லுமாறு மிரட்டும் தோனியில் பேசியதாக கூறப்படும் நிலையில், அவரை கண்டித்து தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலக சங்க மாவட்டத் தலைவர் லூயிஸ் ஜோசப்பிரகாஷ் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் இராதாகிருஷ்ணன், மாவட்ட பொருளாளர் பெரியசாமி, மாவட்ட துணைத் தலைவர்கள் வேலுச்சாமி, தனபால், கார்த்திக், மாவட்ட இணைச் செயலாளர்கள் மலர்விழி, ஷேக் அப்துல்லா, சகிலா, சிவா, மாவட்ட தணிக்கையாளர்கள் குமரேசன், பாண்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story