நீர்நிலை சீரமைப்பு பணியினை துவக்கி வைத்த ஆட்சியர்

நீர்நிலை சீரமைப்பு பணியினை துவக்கி வைத்த ஆட்சியர்
X
சிங்கம்புணரி வட்டத்தில் நீர்நிலை சீரமைப்பு பணியினை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி வட்டம், எஸ்.வி.மங்கலம் குரூப், சிலநீர்பட்டி கிராமத்தின் அருகே செல்லும் பாலாற்றில் தனியார் பங்களிப்புடன் மேற்கொள்ளப்படவுள்ள நீர்நிலை சீரமைப்புப் பணியினை, இன்றையதினம் (02.04.2025) மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் கொடியசைத்து துவக்கி வைத்து தெரிவிக்கையில், தமிழக முதல்வர் நீர்வள ஆதாரங்களை சீரமைத்து நிலத்தடி நீரை மேம்படுத்திடும் பொருட்டு, தமிழகம் முழுவதும் நீர்நிலைகளை பாதுகாத்திட துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், சிவகங்கை மாவட்டத்தில் மழைக்காலங்களில் பெறப்படும் தண்ணீரை வீணாக்காமல் சேமிப்பதற்கு ஏதுவாக வரத்துவாய்கால், கால்வாய்கள், ஏரிகள், மதகுகள் மற்றும் பிற நீர்நிலைகளை புனரமைத்தல், பலப்படுத்துதல் ஆகிய பணிகளை மேற்கொள்ளவும் மற்றும் கலிங்குகள், மதகுகளை மறுகட்டுமானம் செய்தல், நீர்வழிகளில் அடைந்திருக்கும் செடிகளை அகற்றுதல், நீர்நிலைகளில் உள்ள சீமைக்கருவேல் மரங்களை அகற்றுதல் போன்ற பல்வேறுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிக நீர்நிலை உள்ள பகுதியாகவும் சிவகங்கை மாவட்டத்தில், 5,000க்கும் மேற்பட்ட கண்மாய்களும் உள்ளன. விவசாய பெருங்குடி மக்களுக்கு பயனுள்ள வகையிலும், எதிர்கால சந்ததியினர்களின் நலன் காக்கின்ற வகையிலும் நீர்நிலைகளை பாதுகாப்பது அவசியமானதாகும். இப்பணியில், அரசுடன் இணைந்து நீர்நிலைகளை பாதுகாத்திட தனியார் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் தங்களது பங்களிப்பை அளித்திட முன்வந்து, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், தங்களது நிறுவனத்தின் பெருநிறுவன சமூகப்பொறுப்பு நிதியின் (Corporate Social Responsblity Fund (CSR Fund)) பங்களிப்புடன் நீர்நிலைகளை சீரமைக்கும் சிறப்பான பணியினை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஆண்டில் சருகணி ஆற்றுப் பகுதியில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள, சேது பாஸ்கர வேளாண்மை கல்லூரி நிர்வாகம் முன்வந்து, அப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதேபோன்று, தற்சமயம் மாவட்டத்திலுள்ள சிற்றாறு சீரமைக்கப்படவேண்டிய நீர்நிலைகள் ஆகியவைகளில், மாவட்ட நிர்வாகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளுடன் தனியார் பங்களிப்பையும் ஒன்றினைத்து, நடவடிக்கைகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. அதில், பாலாற்று பகுதியில் 25,750 கிலோ மீட்டர் தூரத்திற்கும், உப்பாறு பகுதியில் 2,500 கிலோ மீட்டர் தூரத்திற்கும், மொத்தம் ரூ.33,39,375 மதிப்பீட்டில் நீர்நிலை சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள மதிப்பீடு செய்யப்பட்டு, அதன் தொடக்கமாக, சிங்கம்புணரி வட்டம், எஸ்.வி.மங்கலம் குரூப், சிலநீர்பட்டி கிராமத்தின் அருகே செல்லும் பாலாற்று பகுதியில், கருப்பையா ராமாயி அறக்கட்டளை சார்பில், நிர்வாக அறங்காவலர் கருப்பையா செட்டியார் ரூபாய் 5.00 இலட்சம் நன்கொடையாக வழங்கி, நீர்நிலைகளை பாதுகாப்பதற்கு முன்வந்துள்ளனர். இதற்கு உறுதுணையாக இருந்த கருப்பையா ராமாயி அறக்கட்டளை அறங்காவலர் மணிகண்டனை மாவட்ட ஆட்சியர் பாராட்டினார்
Next Story