அம்மாப்பேட்டையில் ரேஷன் கடையில் ஆய்வு செய்த ஆட்சியர்

X
தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சிப் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பிரியங்கா பங்கஜம் புதன்கிழமையன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அம்மாபேட்டை ஒன்றியத்தில் இராராமுத்திரைக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ரூ.51.42 லட்சம் மற்றும் ரூ.49.58 லட்சம் மதிப்பீட்டிலும் நடைபெற்று வரும் புதிய வகுப்பறை கட்டடத்தின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதையும், இராராமுத்திரக்கோட்டை வடக்குத் தெருவில் அமைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியினையும், அங்குள்ள நியாயவிலைக் கடையில் பொருட்களின் இருப்பு மற்றும் எடை, தரம் குறித்தும், இ-சேவை மையம் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்தார். மேலும், அம்மாபேட்டை ஒன்றியம் குமிழக்குடி ஊராட்சியில் ஊரக வளர்ச்சி துறையின் மூலம் ஊரக வீடுகள் சீரமைத்தல் திட்டத்தின் கீழ் சீரமைக்கப்பட்டுள்ள பல்வேறு வீடுகளும், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள வீடுகளின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு நடைபெற்று வரும் பல்வேறு பணிகள் அனைத்தையும் விரைவாகவும், தரமாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கிட வேண்டும் என்று அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது பாபநாசம் வட்டாட்சியர் பழனிவேல், அம்மாபேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாமிநாதன், நவரோஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story

