பேராவூரணி பகுதியில் தெருநாய்கள் தொல்லை... நாய்க்கடியால் பாதிக்கப்பட்டோா் அதிகரிப்பு

பேராவூரணி பகுதியில் தெருநாய்கள் தொல்லை... நாய்க்கடியால் பாதிக்கப்பட்டோா் அதிகரிப்பு
X
நாய்க்கடி
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பேரூராட்சி பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. நாய்க்கடியால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே, பராமரிப்பின்றித் திரியும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பேராவூரணி பேரூராட்சி பகுதியில் 18 வார்டுகள் உள்ளன. 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். பேரூராட்சி பகுதியில் ஒவ்வொரு தெருவிலும் நூற்றுக்கணக்கான தெரு நாய்கள் சுற்றித் திரிகின்றன. இதேபோல் சுற்று வட்டார கிராமங்களிலும் ஏராளமான தெருநாய்கள் பராமரிப்பின்றி சுற்றித் திரிகின்றன. இந்த நாய்களில் பல நோய்த் தொற்றுக்கு ஆளாகி, தோல் பாதிப்புடன் காணப்படுகிறது. பல நாய்கள் வெறி பிடித்து காணப்படுகிறது. இந்த நாய்கள் தெருவில் செல்லும் பொதுமக்கள், சிறுவர்கள், சிறுமிகளை விரட்டிச் சென்று கடிக்கின்றன. மேலும் கால்நடைகள் கோழிகள் ஆகியவற்றை தாக்குகிறது.  பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு மட்டும் நாளொன்றுக்கு 15 க்கும் மேற்பட்டோர் தெருநாய்க் கடி காரணமாக சிகிச்சை பெற வருகின்றனர். மாதம் ஒன்றுக்கு சராசரியாக 500 பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக தெரிகிறது. மேலும் சாலையில் துரத்தி வரும் நாய்களால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் விபத்துகளில் சிக்கிக் கொள்கின்றனர்.  தெருநாய்க் கடி காரணமாக ரேபிஸ் நோய் தாக்குதலுக்கு ஆளாகி பொதுமக்கள் உயிர் இழக்கும் நிலை உள்ளது. வெறிநாய்க்கடி பிரச்சினை சம்பந்தமாக சட்டப்பேரவையிலும் அண்மையில் விவாதம் எழுந்தது குறிப்பிடத்தக்கது.  எனவே, பேராவூரணி பேரூராட்சி பகுதியில் பராமரிப்பின்றித் திரியும் தெருநாய்களைப் பிடித்து அப்புறப்படுத்தவும், நாய்களுக்கு கருத்தடை செய்யவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வீடுகளில் நாய் வளர்ப்போர் அதற்குரிய உரிமம் பெற்று வளர்க்கவும், பேரூராட்சி சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story