பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல் செய்ய வலியுறுத்திய ஆர்பாட்டம்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டுமென்பது உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான போட்டா-ஜியோ சார்பில் திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு பணப்பலன்களை நிலுவைத் தொகையுடன் உடனடியாக வழங்க வேண்டும். இடைநிலை மற்றும் முதுகலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை சரி செய்ய வேண்டும். ஆசிரியர்கள், அரசு அலுவலர்களுக்கு பழைய முறையில் உயர் கல்விக்கான ஊக்க ஊதியம் வழங்க வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, ஊர் புற நூலகர்கள், செவிலியர்கள், ஓட்டுநர்கள் மற்றும் வருவாய் துறை கிராம உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஏழாவது ஊதியக்குழு 21 மாத நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். இவைகள் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் ஈவேரா, அரசு அலுவலர்கள் ஒன்றியத்தின் மாநில துணைத்தலைவர் வாசுகி, தமிழ்நாடு அரசு அடிப்படை பணியாளர் சங்கம் மாவட்டத் தலைவர் ராஜசேகர், தமிழ்நாடு மேல்நிலை முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்டத் தலைவர் ரஜினி, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட அமைப்பாளர் தமிழ்ச்செல்வன், தமிழ்நாடு ஆசிரியர்கள் சங்க மாவட்டச் செயலாளர் மணிகண்டன், தேசிய ஆசிரியர் சங்க மாவட்ட பொறுப்பாளர் தமிழ்காவலன் ஆகியோர் கூட்டுத் தலைமை வகித்தனர். கூட்டமைப்பில் உள்ள சங்கங்களின் நிர்வாகிகள் ஜூலியஸ், சுப்பிரமணியன், அலெக்ஸாண்டர், ஸ்ரீதர், அசோக்குமார், இளையராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்கங்களின் நிர்வாகிகள், முருகேசன், சதீஷ், கிருஷ்ணமூர்த்தி, ரவி, உமா, குமரவேலு ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். முன்னதாக மாநில செயற்குழு உறுப்பினர் ஐயப்பன் வரவேற்றார் இறுதியில் மாவட்டப் பொருளாளர் சுபாஷ் நன்றி கூறினார்.
Next Story



