போட்டா ஜியோ சார்பில் மாலை நேர  ஆர்ப்பாட்டம்

போட்டா ஜியோ சார்பில் மாலை நேர  ஆர்ப்பாட்டம்
X
நாகர்கோவில்
குமரி மாவட்டம் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு போட்டா ஜியோ சார்பில் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தினை ரத்து செய்ய கோருதல் உள்ளிட்ட  பத்து அம்ச வாழ்வாதார கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  அனைத்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், அனைத்து உள்ளாட்சி பணியாளர்கள் கூட்டமைப்பினர் ( போட்டா ஜியோ ) மாவட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் கோபிநாதன் தலைமையில், தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க ஒருங்கிணைப்பாளர் குணசேகர் முன்னிலையில்  மாலை நேர கவன ஈர்ப்பு கோரிக்கை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.     மாநிலத் தலைவர் தமிழ்நாடு அரசு பொது நூலக துறை அலுவலர் ஒன்றியம் முத்துராமலிங்கம் கோரிக்கையை விளக்கி சிறப்புரையாற்றினார். இதில் ராமலிங்கம், மகேஷ், பெர்வின் ராஜ் ஒஸ்லின், ஸ்டாலின், வெங்கடாஜலம், ஜேம்ஸ் சந்திரகுமார், முருகன், ஜெய போஸ், டயாலின் மிமில், சாலமன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.      நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதியின் படி பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்த வேண்டும், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு சலுகையினை மீண்டும் வழங்க வேண்டும், ஏழாவது ஊதிய குழுவின் 21 மாத நிலுவைத் தொகையினை வழங்க வேண்டும், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பணியாளர்களை அரசு ஊழியர்களாக அறிவிப்பு செய்ய வேண்டும் இத்துறைகளில் தனியார் மய நியமனத்தினை முற்றிலும் கைவிட வேண்டும் போன்ற பத்து அம்ச கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றிட வலியுறுத்தப்பட்டது. இறுதியாக மாவட்ட செயலாளர் உதயகுமார் நன்றி தெரிவித்தார்.
Next Story