கோடை வெயிலை ஒட்டி இளநீர் விலை அதிகம்

X
கோடையையொட்டி, இளநீருக்கு கூடுதல் விலை கிடைப்பதால், ஈரோடு வ.உ.சி பூங்கா மார்க்கெட்டுக்கு தேங்காய் வரத்து குறைந்து, அதன் விலை இருமடங்காக உயர்ந்துள்ளது. ஈரோடு வ.உ.சி பூங்கா மார்க்கெட், சின்ன மார்க்கெட், மணல் மேடு மார்க்கெட் ஆகிய காய்கறி மார்க்கெட்டுகளுக்கு, வெள்ளக்கோவில், காஞ்சிக்கோவில், அறச்சலூர், அத்தாணி, கோபி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தேங்காய் வரத்தாகும்.இந்த மார்க்கெட்டுகளுக்கு தினசரி 8 முதல் 10 டன் வரை தேங்காய் வரத்தான நிலையில், கடந்த 3 நாட்களாக 3 முதல் 4 டன் வரை மட்டுமே தேங்காய் வரத்தாகிறது. இதன் காரணமாக, மார்க்கெட்டுகளில் தேங்காய் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. மொத்த விலையில் ஒரு கிலோ தேங்காய் ரூ.60ம், சில்லரை கடைகளில் ஒரு கிலோ தேங்காய் ரூ. 80 வரையிலும் விற்பனையாகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூ. 12க்கு விற்பனை செய்யப்பட்ட சின்ன தேங்காய் ( ஒன்று), தற்போது ரூ. 30 வரை விற்பனை செய்யப்படுகிறது. ரூ. 20 முதல் ரூ. 25 வரை விற்பனை செய்யப்பட்ட பெரிய தேங்காய் ( ஒன்று), ரூ. 50 வரையில் விற்பனை செய்யப்படுகிறது.இதுகுறித்து மொத்த வியாபாரிகள் கூறியதாவது :கோடை வெயில் காரணமாக, நீர் பற்றாக்குறை ஏற்பட்டு, தேங்காய் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், கொப்பரை தேங்காய்க்கு அதிக விலை கிடைப்பதாலும், கோடையை ஒட்டி இளநீருக்கு கூடுதல் விலை கிடைப்பதாலும், விவசாயிகள் இளநீர் காய்களை அதிகளவில் வெட்டி விற்பனை செய்து வருகின்றனர். இதனால், தற்போது தேங்காய் உற்பத்தியில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு, அதன் விலை அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வு வரும் ஜூன் வரை நீடிக்கும். இவ்வாறு வியாபாரிகள் தெரிவித்தனர்.
Next Story

