சேலம் மாவட்டத்தில் பிளஸ் டூ விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடங்கியது

X
தமிழகத்தில்2024-25 ஆம் கல்வி ஆண்டிற்கான பிளஸ் டூ பொதுத்தேர்வு கடந்த மாதம் 3ம் தேதி தொடங்கி 20ஆம் தேதி நிறைவடைந்தது. சேலம் மாவட்டத்தில் 151 தேர்வு மையங்களில் 320 அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 20,206 மாணவர்களும், 17,732 மாணவிகளும் என மொத்தம் 37,938 பேர் தேர்வு எழுதினர். இதில் 932 மாற்றுத்திறனாளி மாணவர்கள் சொல்வதைக் கேட்டு எழுதுபவர் உதவியுடன் தேர்வு எழுதினார். இந்நிலையில் பிளஸ் டூ பொதுத்தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடங்கியது. சேலத்தில் சிறுமலர் மேல்நிலைப்பள்ளி, ஆத்தூர் அம்மம்பாளையம் சரஸ்வதி மெட்ரிக் பள்ளி, மேச்சேரி ஸ்ரீராம் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய மூன்று பள்ளிகளில் முகாம் அமைக்கப்பட்டுள்ளது. சிறுமலர் மேல்நிலைப் பள்ளியில் நடந்த முகாமில் மாவட்ட கல்வி அலுவலர் மாண்புள்ளி விடை திருத்தும் ஆசிரியர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார். தொடர்ந்து இந்த முகாமில் மாவட்ட கல்வி அலுவலர்கள் முகாம் அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளுக்காக சுமார் 30பேரும், மதிப்பெண் சரிபார்ப்பு அலுவலர் 285, முதல் தேர்வர்கள் 285, கூர்ந்தாய்வு அலுவலர்கள் மற்றும் 1710 உதவி தேர்வாளர்கள் நியமிக்கப்பட்டு மதிப்பீடு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
Next Story

