ஆர்.டி.ஓ.பேச்சுவார்த்தை இடத்தில்மீண்டும் சர்ச்சை

ஆர்.டி.ஓ.பேச்சுவார்த்தை இடத்தில்மீண்டும் சர்ச்சை
X
குமாரபாளையம் அருகே ஆர்.டி.ஓ.பேச்சுவார்த்தை இடத்தில் நீர் குட்டையில் அங்கிருக்கும் மண் எடுத்து கொட்ட எதிர்ப்பு தெரிவித்த அதிகாரியால் மீண்டும்  பிரச்சனை
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி, வீரப்பம்பாளையம், வேளாங்காடு பகுதியில் ஒரு சமுதாயத்தினர், அவர்களது குடும்பங்களை சேர்ந்த சுமார் 100க்கும் மேற்பட்ட இறந்தவர்கள் நினைவாக, மற்றொரு சமுதாய நபர் ஒருவரின் பட்டா நிலத்தில் நினைவுக்கல் வைத்து வழிபட்டு வந்தனர். இதற்கு நில உரிமையாளர் மற்றும் அவரது சமுதாயத்தினர், கல் வைத்த நபர்களிடம் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். நட்டு வைத்த நினைவு கற்களை அகற்றுமாறு போலீசில் புகார் கொடுத்து, அந்த பிரச்னை தீராத நிலையில், மீண்டும் அதே இடத்தில் நினைவுக்கல் வைத்து வழிபடுகிறோம் என்று கூறி, 75க்கும் மேற்பட்டவர்கள் திரண்டனர். இதற்கு நில உரிமையாளர் உள்ளிட்ட, நில உரிமையாளரின் சமுதாய மக்கள் பலரும் திரண்டதால், மோதல் சூழல் ஏற்பட்டது. இது சம்பந்தமாக திருச்செங்கோடு ஆர்.டி.ஒ. அலுவலகத்தில், ஆர்.டி.ஓ. சுகந்தி தலைமையில் சில நாட்கள் முன்பு நடந்த நான்காம் கட்ட பேச்சுவார்த்தையில் சுமுக தேர்வு ஏற்பட்டதாக பொதுமக்கள் கூறினர். ஆனால் இடம் ஆய்வுக்கு சென்ற அதிகாரிகள் வசம் ஒரு தரப்பினர் தங்கள் ஆட்சேபனையை தெரிவித்தனர். நேற்று மீண்டும் சமரச பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களுக்கு நில அளவீடு செய்து, அவர்கள் கேட்டபடி வழங்கப்பட்டது. இது குறித்து விவசாயி விஸ்வநாதன் கூறியதாவது: கடத்த இரு நாட்களாக இடத்தை ஆய்வு செய்ய வருவாய்த்துறையினர் மேற்படி இடத்திற்கு சென்றனர். ஆனால், பேச்சுவார்த்தையில் ஒப்புக்கொண்ட படி நடந்து கொள்ளாமல், மேலும் அதிக நிலம் ஒதுக்கி தருமாறு ஒரு தரப்பினர் கோரிக்கை விடுத்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் தாசில்தார் உள்ளிட்ட வருவாய்த்துறையினர் பணியினை முடிக்க முடியாமல் திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டது. நேற்றுமுன்தினம் மீண்டும் அதே இடத்திற்கு வந்த அதிகாரிகள், அவர்களிடம் சமரசம் பேசி, அவர்கள் கேட்டபடி, நில அளவீடு செய்து நிலத்தை பொக்லின் வைத்து சுத்தப்படுத்தி ஒப்படைத்தனர். ஒரு சமுதாயத்திற்கு நடு கல் வைக்க கொடுக்கப்பட்ட இடம் பள்ளமாக இருந்தது. சுமார் 6 அடி அளவு மண் கொட்டி உயர்த்தினால்தான், நடு கல் வைக்க முடியும். மழைக்காலங்களில் அதுதான் பாதுகாப்பாக இருக்கும். ஆனால்,அங்குள்ள ஏரிக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் பொக்லின் மூலம் மண் எடுத்து, பள்ளத்தை நிரப்பும் போது, வி.ஏ.ஓ. ரஞ்சித்குமார் அங்கு வந்து, உங்கள் மீது வழக்கு உள்ளது. இங்கு மண் எடுக்க கூடாது. மீறினால் போலீசில் புகார் கொடுக்கப்படும், என்றார். நாங்கள் மற்றொரு தரப்பினருக்கு நல்லது தான் செய்கிறோம். போலீசில் புகார் கொடுப்பதானால் கொடுங்கள் என்று கூறினேன். இவரால் ஒழுங்காக நடந்து கொண்டிருந்த வேலை, பாதியில் நின்றது. தாசில்தாருக்கு போன் செய்தேன். லைன் கிடைக்கவில்லை. இத்தனைக்கும் அவர் பொறுப்பு வி.ஏ.ஓ.தான். இத்தனை நாள் என்ன நடந்தது என்று புரியாமல் பேசுகிறார். இவ்வாறு அவர் கூறினார். ஆர்.ஐ. புவனேஸ்வரி கூறியதாவது: வி.ஏ.ஓ. ரஞ்சித் அவ்வாறு பேசியபோது, இந்த 6 கட்டங்களாக நடந்து, தற்போதுதான் இந்த அளவிற்கு வந்துள்ளது. அதனால் பார்த்து பேசவும் என்று கூறினேன். இவ்வாறு அவர் கூறினார்.
Next Story