திருமருகல் கல்லுளி திருவாசல் சாலையில் கொள்ளிடம் குடிநீர் குழாயில் உடைப்பு

X
நாகை மாவட்டம் திருமருகல் ஊராட்சி சன்னதி தெருவிலிருந்து, கல்லுளி திருவாசல் சாலை வழியாக, கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட குடிநீர் குழாய் செல்கிறது. நாகூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, தலைஞாயிறு, வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், திருமருகல் அரசு மாணவிகள் விடுதி அருகில், சாலையின் நடுவில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், குடிநீர் அதிகளவில் வெளியேறி சாலையிலும், அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளிலும் ஓடி குளம் போல் தேங்கி வீணாகிறது. குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்ய, குழி தோண்டப்பட்டு, சரி செய்யப்படாமல் அப்படியே உள்ளது. கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் குடிநீரை பயன்படுத்தும் நாகூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, தலைஞாயிறு, வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு, குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது. திருமருகல் அரசு மாணவிகள் விடுதி அருகில் ஏற்பட்ட குழாய் உடைப்பிற்கு அருகில், தனியார் மழலையர் பள்ளி மற்றும் அரசு மாணவியர் விடுதிக்கு செல்லும் மாணவர்கள் தவறுதலாக குழியில் தவறி விழும் அபாய நிலை உள்ளது. அடிக்கடி ஆடு, மாடுகள் குழியில் தண்ணீர் குடிக்க சென்று தவறி விழுந்து விடுவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும், தேங்கி நிற்கும் நீரால் சுகாதார சீர்கேடு மற்றும் நோய் தொற்றுகள் ஏற்படும் அபாயமும் உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்ட அதிகாரிகள், கல்லுளி திருவாசல் சாலையில் உடைப்பு ஏற்பட்டுள்ள குடிநீர் குழாய்களை சீரமைக்க, கவனம் செலுத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story

