பொது கழிப்பறையை பயன்படுத்துவதில் ஏற்பட்ட தகராறில் மூதாட்டி அடித்து கொலை
சோழவரம் அருகே காம்பவுண்ட் வீட்டில் பொது கழிப்பறையை பயன்படுத்துவதில் ஏற்பட்ட தகராறில் மூதாட்டி அடித்து கொலை. அடித்து கீழே தள்ளி மார்பில் மிதித்து கொலை செய்த தாய், மகள் ஆகிய இருவர் கைது. திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த பம்மதுகுளம் பெருமாள் நகர் பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் பிச்சாண்டி தமது மனைவி லட்சுமியுடன் (65) தனியாக வசித்து வந்தார். 8 வாடகை வீடுகள் அடங்கிய காம்பவுண்ட் வீட்டில் 6 பொது கழிப்பறைகள் பொது பயன்பாட்டில் உள்ளன. பொது கழிப்பறைகளை பயன்படுத்துவதில் லட்சுமிக்கும், மற்றொரு வீட்டில் வசிக்கும் சுந்தரி குடும்பத்திற்கும் தகராறு இருந்து வந்துள்ளது. சுந்தரி கழிவறையை முறையாக தூய்மைப்படுத்தவில்லை என லட்சுமி தட்டி கேட்டுள்ளார். அப்போது சுந்தரியும், அவரது மகள் கோமதியும் சேர்ந்து மூதாட்டி லட்சுமியை அடித்து உதைத்து கீழே தள்ளி மார்பில் மிதித்துள்ளனர். அப்போது தடுக்க வந்த முதியவர் பிச்சாண்டியையும் இருவரும் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்து மயங்கிய மூதாட்டி லட்சுமியை மீட்டு தனியார் மருத்துவமனையில் முதலுதவி அளித்து மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மூதாட்டி லட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சோழவரம் போலீஸ் வழக்கு பதிவு செய்து மூதாட்டியை அடித்து கொலை செய்த தாய் சுந்தரி (55), மகள் கோமதி (30) இருவரையும் கைது செய்தனர்.
Next Story





