ராமநாதபுரம் பிரதமர் வருகைக்கு ஐந்து அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது

பாம்பன் புதிய பாலம் திறப்பு விழாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி வருகை தருவதையொட்டி ராமேஸ்வரத்தில் ஐந்து அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது
ராமநாதபுரம் மாவட்டம்பாம்பன் புதிய பாலம் திறப்பு விழாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி வருகை தருவதையொட்டி ராமேஸ்வரத்தில் ஐந்து அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வரும் 5ந் தேதி மாலையிலிருந்து 6 ந்தேதி வரை ராமேஸ்வரம் தீவு பகுதியில் ட்ரோன்கள் பறக்க தடை செய்யப்பட்டுள்ளதாகவும், பிரதமர் வருகையின் போது இரண்டு மணி நேரம் போக்குவரத்து மாற்றி அமைக்கப்படும் என்பதால் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார் பாம்பன் கடலில் புதிதாக கட்டப்பட்டுள்ள புதிய ரயில் பாலத்தை வரும் 6ந் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார். திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக பிரதமர் ராமேஸ்வரம் வர இருப்பதை ஒட்டி ராமேஸ்வரம், மண்டபம் பாம்பன் உள்ளிட்ட பகுதிகளில் ஐந்து அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பிரதமர் வருகையையொட்டி செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு பிரிவு ஐஜி நவநீத்குமார் மேத்ரா தலைமையிலான பாதுகாப்பு அதிகாரிகள் நேற்றுமண்டபம் ஹெல்பேட் தளத்தில் இருந்து ஆய்வை தொடங்கினர். அதன் பின்னர் பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு விழா விற்காக சாலை பாலத்தில் தற்காலிக மேடை அமைய உள்ள இடம், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில், ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஆலயம் விடுதி உள்ளிட்ட பகுதிகளில் முதல் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் தற்போது செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும், மேலும் செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் மட்டத்திலான ஆலோசனைக் கூட்டம் ஆலயம் விடுதியில் உள்ள கூட்டரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட ஆட்சியர், மத்திய, மாநில் உளவுத்துறை அதிகாரிகள், இந்திய கடற்படை, இந்திய கடலோர காவல் படை உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பிரதமருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் நிகழ்ச்சியின் நடைபெறும் இடத்தில் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்டவைகள் தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளரிடம் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ், பிரதமர் 6ஆம் தேதி மதியம் சுமார் 12 மணி அளவில் மண்டபம் ஹெலிகாப்டர் தளத்திற்கு வந்து இறங்குகிறார் பின்னர் மீண்டும் 2 மணிக்கு புறப்பட்டு செல்ல இருக்கிறார். பிரதமரின் வருகையை ஒட்டி கடலோர காவல் படை, கடற்படை, உளவுத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் என ஐந்தாயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பிரதமர் இரண்டு மணி நேரம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார் எனவே அந்த இரண்டு மணி நேரம் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் இரண்டு மணி நேரத்திற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்குமாறு காவல் கண்காணிப்பாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் ராமேஸ்வரம் கோவில் தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வதற்கு எந்த தடையும் இல்லை எனவும், 5ந் தேதி மாலையிலிருந்து 6ந் தேதி பிரதமர் செல்லும் வரை பாம்பன், மண்டபம், தங்கச்சி மடம், அக்காளமட ஆகிய பகுதிகளில் ட்ரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது
Next Story