பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாஜக, தவெக ஆர்ப்பாட்டம்!
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி இயங்கி வருகிறது. மெக்கானிக்கல் பிரிவு பேராசிரியர் மதன்குமார் பாலியல் தொல்லை கொடுப்பதாக கூறி 3 மாணவிகள் கல்லூரி முதல்வரிடம் புகார் தெரிவித்து இருந்தனர். இதில் கார்மெண்ட் டெக்னாலஜி பாடப்பிரிவில் முதலாம் ஆண்டு பயிலும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்த 17 வயது மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் பேராசிரியர் மதன்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நியாயம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், குற்றச்சாட்டுக்கு உள்ளான ஆசிரியரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் பாஜக தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் சரவண கிருஷ்ணன் தலைமையில் அக்கட்சியினர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கோரிக்கை மனுவினையும் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அளித்தனர். இதே கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக வெற்றிக் கழகத்தினரும் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Next Story



