விவசாயிகளிடம் ஆலோசனை நடத்திய எம்.எல்.ஏ

X
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே அழகாபுரியில் உள்ளது குடகனாறு அணை. 27 அடி உயரம் கொண்ட இந்த அணையில் 15 ஷட்டர்கள் உள்ளன. இந்த அணையின் மூலம் திண்டுக்கல் மற்றும் கரூர் மாவட்டத்தில் 9500 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. தற்போது அணையில் நீர் இருப்பு 25 அடி உள்ளது. ஆண்டுதோறும் ஜனவரி மாதம் திண்டுக்கல் மற்றும் கரூர் மாவட்ட விவசாயிகள் பயன்பாட்டிற்காக பாசன நீர் திறக்கப்படும். இந்த நிலையில் அணையின் வலது மற்றும் இடதுபுற வாய்க்கால்களை புனரமைக்கும் பணி நடைபெற்று வருவதால் இந்த வருடம் பாசன நீர் திறப்பதில் தாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில் தற்போது பணிகள் முடிவுற்றதால் பாசன நீர் திறப்பது குறித்து வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினரும் சட்டமன்ற மதிப்பீட்டு குழு தலைவருமான எஸ்.காந்தி ராஜன் தலைமையில், பொதுப்பணித்துறை அதிகாரிகள் முன்னிலையில் வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த விவசாய சங்க நிர்வாகிகள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். அப்போது அணையில் 20 அடிக்கு கீழ் தண்ணீர் குறையாமல் இருக்கும் படி பாசன நீர் திறந்தால் மட்டுமே புதுக்கோட்டை ஊராட்சி, குட்டம் ஊராட்சி உட்பட ஏழுக்கும் மேற்பட்ட ஊராட்சிகள் உள்ள ஊர்களில் உள்ள பொதுமக்கள் குடிநீர் தேவை பற்றாக்குறை இல்லாமல் இருக்கும் என்று விவசாயிகள் வலியுறுத்தினர். அதற்கு பதில் அளித்த சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன் அனைத்துப் பகுதி விவசாயிகளுக்கும் எந்த பாதிப்பும் இல்லாத வகையில் பாசன நீர் திறக்கப்படும் என்று தெரிவித்தார். இந்த கூட்டத்தில் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் தனசேகர், உதவி பொறியாளர்கள் முருகன், மகேஷ், திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் கவிதா பார்த்திபன், வேடசந்தூர் பேரூர் செயலாளர் கார்த்திகேயன், எரியோடு பேரூர் செயலாளர் செந்தில்குமார், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் ரவிசங்கர், வர்த்தகர் அணி அமைப்பாளர் பண்ணை கார்த்தி, மாநில பொதுக்குழு உறுப்பினர் பூபதி மாரிமுத்து, நெசவாளர் அணி சொக்கலிங்கம், இலக்கிய அணி இளங்கோ மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story

