கோவை: இரும்புத் தூண் சரிந்து விழுந்து தொழிலாளி பலி !

X
கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் சாய்பாபா காலனி பகுதியில் நடைபெற்று வரும் புதிய மேம்பால கட்டுமானப் பணியின்போது நேற்று எதிர்பாராத விதமாக இரும்புத் தூண் சரிந்து விழுந்ததில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். மேலும் ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவத்தன்று காலை வழக்கம் போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது, கட்டுமானப் பணிக்கு பயன்படுத்தப்பட்ட இரும்புத் தூண் திடீரென கீழே விழுந்தது. இதில் பணியில் இருந்த தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். உடனடியாக சக தொழிலாளர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். எனினும், ராமநாதபுரத்தைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். கன்னியாகுமரியைச் சேர்ந்தவரும், மேம்பால கட்டுமானப் பணியின் துணை ஒப்பந்ததாரருமான ஜூலியஸ் என்பவர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு, ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த சாய்பாபா காலனி போலீசார், உயிரிழந்த தொழிலாளியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story

