தென்காசி கோயில் குடமுழுக்கு விழா: முன்னேற்பாடுகளை ஆட்சியா் ஆய்வு

X
தென்காசி அருள்மிகு ஸ்ரீ காசி விசுவநாதா் திருக்கோயிலில் குடமுழுக்கு விழா திங்கள்கிழமை (ஏப்.7) நடைபெறுகிறது. இதையொட்டி, மாவட்ட நிா்வாகம் மற்றும் அரசுத் துறைகள் வாயிலாக மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் தலைமை வகித்தாா். இந்து சமய அறநிலையத் துறை, காவல், வருவாய் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா். கோயில் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள குடிநீா், தற்காலிக கழிப்பறை வசதிகள், பாதுகாப்பு முன்னேற்பாடுகள், சிறப்பு பேருந்து வசதி ஆகியவற்றை ஆட்சியா் ஆய்வு செய்தாா். அவசர ஊா்தியுடன் மருத்துவக் குழு, தீயணைப்புத் துறையினா் தயாா் நிலையில் இருப்பதை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தினாா். குடமுழுக்கு விழாவிற்கு வரும் பக்தா்கள், உபயதாரா்கள், முக்கிய பிரமுகா்கள் சிரமமின்றி தரிசனம் செய்வதற்கும், நெரிசலைத் தவிா்ப்பதற்கும் தடுப்பு கம்புகள் அமைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவும், பக்தா்கள் மீது ட்ரோன் மூலம் தீா்த்தம் தெளிக்கவும், குடமுழுக்கை அருகில் இருந்து காணும் வகையில் பெரிய திரைகளில் ஒளிபரப்பு செய்யவும் அறிவுறுத்தினாா்.
Next Story

