ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் திருவிழா
ஈரோடு பெரியமாரியம்மன் வகையறா கோயில்களில் கம்பம் பிடுங்கும் விழாவும், மஞ்சள் நீராட்டு விழாவும் நேற்று மாலை 3 மணிக்கு நடைபெற்றது. இதையொட்டி, கம்பம் ஊர்வலம் செல்லும் இடங்களில் மாநகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. ஈரோடு மாநகரில் பெரியமாரியம்மன் கோயில் மற்றும் அதன் வகையறாவை சேர்ந்த சின்னமாரியம்மன், காரைவாய்க்கால் மாரியம்மன் கோயில்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை ஆகும். இந்த கோயில்களில் ஆண்டுதோறும் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா வெகுவிமர்சையாக கொண்டாடப்படும். நடப்பாண்டுக்கான திருவிழா கடந்த மாதம் 18ம் தேதி பூச்சாட்டுதலுடன் விழா துவங்கியது. இதையடுத்து மூன்று கோயில்களிலும் கடந்த மாதம் 22ம் தேதி இரவு கம்பங்கள் நடப்பட்டது. இதைத்தொடா்ந்து ஈரோடு மாநகர் மற்றும் மாநகரை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள் விழா துவங்கியது முதல் தினந்தோறும் காவிரி ஆற்றில் இருந்து பால் குடம், தீர்த்தக் குடம் எடுத்து ஊர்வலமாக வந்து முன்று கோயில்களிலும் உள்ள கம்பத்திற்கு புனித நீர் ஊற்றி அம்மனை வழிபட்டு சென்றனர். மேலும், ஏராளமான பக்தர்கள் அலகு குத்தி வந்தும், அக்னி சட்டி, பூங்கரகம் எடுத்து வந்தும் அம்மனுக்கு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். விழாவின் முக்கிய நிகழ்வுகளான கடந்த 1ம் தேதி காரைவாய்க்கால் மாரியம்மன் கோயில் குண்டம் விழாவும், 2ம் தேதி சின்னமாரியம்மன் கோயில் தேரோட்டமும் நடைபெற்றது. இந்நிலையில், விழாவின் இறுதி நிகழ்வான ஈரோடு பெரியமாரியம்மன், சின்னமாரியம்மன், காரை வாய்க்கால் மாரியம்மன் கம்பம் பிடுங்கும் நிகழ்ச்சி நேற்று மாலை 3 மணிக்கு அளவில் மூன்று கோயில்களும் கம்பங்களும் பிடுங்கப்பட்டு, அந்தந்த கோயில் பூசாரிகள் கம்பத்தை தோளில் சுமந்தபடி ஊர்வலமாக தனித்தனியாக பெரியமாரியம்மன் கோயில் கம்பம் பன்னீர்செல்வம் பூங்கா வழியாகவும், சின்னமாரியம்மன் கோயில் கம்பம் அக்ரஹாரம் வீதி வழியாகவும், காரைவாய்க்கால் மாரியம்மன் கோயில் கம்பம் கச்சேரி வீதி வழியாகவும் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, மணிக்கூண்டு பகுதியில் மூன்று கம்பங்களும் ஒன்று சேர்ந்தது. அதன்பின், மூன்று கோயில்களின் கம்பங்களும் ஈஸ்வரன் கோவில் வீதி வழியாக காமராஜர் வீதி, மீனாட்சி சுந்தரனார் சாலை, அரசு மருத்துவமனை ரவுண்டானா, மேட்டூர் சாலை, ஈரோடு பஸ் ஸ்டாண்ட், ஸ்வஸ்திக் கார்னர், சத்தி சாலை, எல்லை மாரியம்மன் கோயில், மணிக்கூண்டு, பெரியார் வீதி, மரப்பாலம் மண்டபம் வீதி, ஆர்கேவி. சாலை, டவுன் போலீஸ் ஸ்டேஷன், அக்ரஹாரம் வீதி வழியாக இரவு காரை வாய்க்காலை அடைந்தது. பின்னர் மூன்று கோயில்களின் கம்பங்களும் வாய்க்காலில் விடப்பட்டது. ஊர்வலம் செல்லும் பாதைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. மஞ்சள் நீராட்டு பெரியமாரியம்மன் கோயில் மற்றும் சின்னமாரியம்மன், காரைவாய்க்கால் மாரியம்மன் கோயில்களில் நடப்பட்டுள்ள கம்பங்கள் பிடுங்கப்பட்டதும், ஈரோடு மாநகர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது. இதில் சிறுவர், சிறுமிகள், இளைஞர்கள், பெண்கள் என அனைத்து மக்களும் ஒருவர் மீது ஒருவர் மஞ்சள் நீரை ஊற்றி மஞ்சள் நீராட்டு விழாவை மகிழ்ச்சியாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
Next Story




