விடிய விடிய பெய்த மழை

X
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகளவில் இருந்து வந்தது. இதனால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அவதி அடைந்து வந்தனர். அனல் காற்று வீசியதால் வாகன ஓட்டிகளும் திணறி வந்தனர். இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் 2 நாட்கள் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இதன்படி நேற்று முன்தினம் சுமார் அரை மணி நேரம் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல் மாவட்டம் முழுவதும் வெயில் கொளுத்தியது. ஆனால் மாலை நேரத்தில் பல்வேறு இடங்களில் லேசான மழை பெய்ய தொடங்கியது. குறிப்பாக கோபிசெட்டிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இரவில் லேசாக செய்யத் தொடங்கிய மழை நேரம் செல்ல செல்ல இடியுடன் கூடிய கனமழையாக கொட்டித் தீர்த்தது. விடிய விடிய கொடி தீர்த்த கனமழையால் கோபிசெட்டிபாளையம் பகுதியில் தாழ்வான இடங்களில் மழை நீர் சாலையோரம் தேங்கி நின்றது. இடியுடன் கூடிய கனமழையால் பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. கோபி அடுத்த நாகதேவம் பாளையம் பகுதியில் கீழ்பவானி வாய்க்கால் செல்கிறது அதன் அருகே கசிவு நீர் குட்டையில் நேற்று இரவு பெய்த மழையால் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நீர் பாய்ந்து சென்றது. இதன் காரணமாக அந்தப் பகுதியில் சுமார் 15 வீடுகளில் மழைநீர் சூழ்ந்தது. இரவு நேரத்தில் மழை நீர் சூழ்ந்ததால் மக்கள் கடும் அவதி அடைந்தனர். இதனை அடுத்து கோபி தாசில்தார் சரவணன், நீர்வளத்துறை அதிகாரிகள், பொதுப்பணித்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். பின்னர் குட்டையில் அடைப்பு சரி செய்யப்பட்டு மழைநீர் வடிந்தது. இதன் பின்னர் இயல்பு நிலை திரும்பியது. நேற்று ஒரே நாள் இரவில் மட்டும் கோபிசெட்டிபாளையத்தில் 15 சென்டிமீட்டர் மழை கொட்டி தீர்த்தது. இதேபோல் அந்தியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. அப்போது அந்தியூர் கருவாச்சி அடுத்த பால பாளையம் பகுதியில் உள்ள ஒரு கோவிலில் இடி தாக்கியது. இதில் கோவிலில் லேசான சேதாரம் ஏற்பட்டது. நேற்று இரவு ஈரோடு புறநகர் பகுதியில் விடிய விடிய மழை கொட்டி தீர்த்தது. எலந்தை குட்டை மேடு, கவுந்தப்பாடி பகுதிகளில் 100 மில்லி மீட்டர் மழை பதிவானது. இதேபோல் நம்பியூர் அம்மாபேட்டை, கொடிவேரி, மாவட்ட அணை பகுதிகளான பவானிசாகர் குண்டேரி பள்ளம் வரட்டு பள்ளம் போன்ற பகுதிகளிலும் மழை கொட்டி தீர்த்தது. இதைப்போல் சத்தியமங்கலம் தாளவாடி மலைப்பகுதிகளும் பரவலாக மழை பெய்தது. கோடைமழை காரணமாக ஈரோடு மாவட்டத்தில் வெப்பநிலை தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. பலத்த காற்றுடன் மழை பெய்ததால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. ஈரோடு மாநகர் பகுதியில் நேற்று காலை வழக்கம் போல் வெயில் அடித்தது. ஆனால் இரவு நேரத்தில் பரவலாக மழை பெய்தது. இந்த மழை காரணமாக ஈரோடு வ உ சி காய்கறி மார்க்கெட்டில் வழக்கம்போல் சேரும் சகதியுமாக காட்சியளித்தது. இதனால் மார்க்கெட்டிற்கு காய்கறி வாங்க வந்த வியாபாரிகள் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:- கோபி - 155, எலந்தகுட்டைமேடு - 100.40, கவுந்தப்பாடி - 91.40, நம்பியூர் - 79, கொடிவேரி - 52.20, வரட்டு பள்ளம் - 51.20, பவானிசாகர் - 39.40, சென்னிமலை - 39, குண்டேரி பள்ளம் - 29.40, சத்தியமங்கலம் - 23, பவானி - 19, தாளவாடி - 15, ஈரோடு - 12.30, மொடக்குறிச்சி - 3, பெருந்துறை - 2.
Next Story

