செந்துறை}கோட்டைக்காடுக்கு கூடுதல் பேருந்து வசதிகள் ஏற்படுத்தித் தர வலியுறுத்தல்

X

செந்துறை}கோட்டைக்காடுக்கு கூடுதல் பேருந்து வசதிகள் ஏற்படுத்தித் தர வலியுறுத்தினர்.
அரியலூர்,ஏப்.6- அரியலூர் மாவட்டம், செந்துறை}கோட்டைக்காடுக்கு கூடுதல் பேருந்து சேவையை தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர். ஆலத்தியூர் கிராமத்தில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் கிளை மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:செந்துறையில் இருந்து கோட்டைக்காடுக்கு காலை 8.30 மணிக்கு வந்து செல்லும் பேருந்து, அதன்பிறகு பிற்பகல் 2 மணிக்கு வருவதால் இந்த இடைப்பட்ட நேரங்களில் பேருந்து வசதிகள் இல்லாமல், மேற்கண்ட வழித்தடங்களிலுள்ள கிராம மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே இவ்வழித்தடங்களில் பகல் மற்றும் இரவு நேரங்களில் கூடுதல் பேருந்து சேவைகளை தொடங்க வேண்டும்.ஜெயங்கொண்டத்திலிருந்து ஆதனக்குறிச்சி வந்து செல்லும் அரசுப் பேருந்தினை தெத்தெரி}ஆலத்தியூர் வழியாக கோட்டைக்காடு வரை நீடிப்பு செய்ய வேண்டும். இதே போல் விருத்தாசலம்}முள்ளுக்குறிச்சி வரை சென்று வரும் பேருந்தினையும் கோட்டைக்காடு வரை நீடிப்பு செய்ய வேண்டும். ஆலத்தியூர் அருந்ததியர் மக்களுக்கு சொந்தமான மயானத்துக்கு மின் விளக்குகள் மற்றும் தண்ணீர் வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும். ஆலத்தியூரில் சொந்த குடியிருப்பு வசதிகள் இல்லாத 60 தலித் குடும்பங்களுக்கு, தளவாய் இந்தியா சிமென்ட், ஆலத்தியூர் ராம்கோ சிமென்ட் ஆலைகளிடம் பேசி இலவச மனை பெற்றுத் தரவேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் கலந்து கொண்ட முன்னாள் மாவட்ட துணைச் செயலர் டி.தண்டபாணி, கட்சி கொடியை ஏற்றி வைத்து, கட்சியின் நூற்றாண்டு மற்றும் நூற்றாண்டு விழா காணும் மூத்தத் தலைவர் நல்லக்கண்ணுவின் சுதந்திர போராட்டங்கள், ஆற்றிய பணிகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.அரியலூர் ஒன்றியச் செயலர் பாண்டியன் மாநாட்டை தொடக்கி வைத்து பேசினார். மாநாட்டில், செயலாளராக காசிநாதன், துணைச் செயலாளராக செல்வராசு, பொருளாளராக கொளஞ்சி ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
Next Story