நூல் வெளியீட்டு விழா

X
சங்கராபுரத்தில் நூல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கோவல் தமிழ் சங்கமும், கள்ளக்குறிச்சி மாவட்ட வரலாற்று நடுவமும் இணைந்து விழாவை நடத்தின. சங்கராபுரம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவிற்கு திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரி சரித்திர பேராசிரியர் ஸ்தனிஸ்லாஸ் தலைமை வகித்தார். அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் ராமசாமி, கோவல் தமிழ்ச் சங்க துணைத் தலைவர் தேசப்பிரியன், ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் சுதாகரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் மதியழகன் வரவேற்றார். விழாவில், கவிஞர் தமிழ்ச்செல்வன் எழுதிய அதிகாரத்தின் அழகி என்ற கவிதை நூலினை கோவல் தமிழ்ச் சங்கத் தலைவரும், மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் தலைவருமான சிங்கார.உதியன் வெளியிட்டுப் பாராட்டுப் பட்டயம் வழங்கினார். வணிகர் பேரவை மாவட்டப் பொருளாளர் இராம.முத்துக்கருப்பன் நூலினைப் பெற்றுக்கொண்டார். கவிஞர் கலைச்சித்தன், ஆசிரியர் ஜாகீர், கற்க கசடற அறக்கட்டளைத் தலைவர் தேவ.திருவருள் ஆகியோர் நூலினை ஆய்வு செய்து பேசினர். வழக்குரைஞர் தமிழ்க்குமரன் ஆசிரியர்கள் பாரதிகிருஷ்ணன், எடிசன், பெரியசாமி ஆகியோர் நூலாசிரியரை பாராட்டிப் பேசினர். திரைப்பட நடிகர் பிரான்பாய், திரைப்பட சட்ட பயிற்சியாளர் வைலன்ட் வேல் உள்பட தமிழ் ஆர்வலர்கள், தமிழ்ச் சான்றோர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.
Next Story

