சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குழாய் அமைக்க கோரிக்கை

X
ஈரோடு ரயில்வே ஸ்டேஷனுக்கு தினசரி 60க்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்கின்றன. தினசரி ஆயிரத்திற்கு மேற்பட்ட பயணிகள் ரயிலில் வந்து செல்கின்றனர். குறிப்பாக, ஈரோட்டில் இருந்து திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனிகளுக்கு தினசரி ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பணிக்கு சென்று வருகின்றனர்.இவை தவிர, வடமாநிலங்களைச் சேர்ந்தவர்களும் தினசரி பயணம் செய்து வருகின்றனர். இவர்களெல்லாம் கூலித் தொழிலாளர்களே.இந்நிலையில், ரயில்வே ஸ்டேஷன் டிக்கெட் கவுண்டர் அருகே, பயணிகள் வசதிக்காக வைக்கப்பட்டிருந்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குழாய், விரிவாக்கப் பணிக்காக அகற்றப்பட்டது. தினசரி ரயில்வே நிலையத்துக்கு வரும் கூலித்தொழிலாளர்கள் டிக்கெட் எடுக்க வரிசையில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதாக உள்ளது. அப்போது, அப்பகுதியில் குடிநீர் குழாயின்றி, நீர் அருந்த முடியாமல் தவித்து வருகின்றனர். ரயில்வே ஸ்டேஷனில் ஒரு வாட்டர் பாட்டில் ரூ.25 முதல் ரூ.40 வரை விற்பனை செய்யப்படுவதால், அவற்றை விலைக் கொடுத்து வாங்க முடியாமல் கூலித்தொழிலாளர்கள் திண்டாடி வருகின்றனர். எனவே, தற்போது விரிவாக்கப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், டிக்கெட் கவுண்டர் அருகே மீண்டும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குழாய் அமைக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story

