வக்பு மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

X
மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி வக்பு வாரிய சட்டத்தில் திருத்தத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. இதற்கு நாடு முழுவதும் இஸ்லாமிய அமைப்புகள், எதிர்க்கட்சிகள், பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இச்சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றுவதால் வக்பு வாரியத்தின் செயல்பாட்டில் அரசின் தலையீட்டை அதிகரிக்கும் என்ற அச்சம் உள்ளதாகவும், அதேநேரத்தில் இஸ்லாம் மதத்திலும் அரசு தலையீடு அதிகரிக்கும் என்றும் புதிய சட்டத் திருத்தம், முஸ்லிம் சமூகத்தின் சுதந்திரத்தைப் பாதிக்கும் என்றும், வக்பு வாரியங்களில் உள்ள அதிகாரங்களை பறிக்கும் செயல் என இஸ்லாமிய அமைப்புகள் குற்றம் சாட்டிவருகிறது. இதுபோன்ற அம்சங்கள் நிறைந்த வக்பு மசோதா, அரசியலமைப்புக்கு முரணானது மற்றும் மத சுதந்திரத்தின் மீதான தாக்குதல் என்றும் இஸ்லாமியர்கள் குற்றம் சாட்டி அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக சிவகங்கையில் வஃக்பு திருத்த சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நேரு பஜாரில் உள்ள சிவகங்கை தலைமை பள்ளிவாசலான வாலாஜா நவாப் ஜும்ஆ பள்ளிவாசலில் கருப்புக் கொடி ஏற்றப்பட்டுள்ளது. மேலும் அங்கு சிறப்பு தொழுகைக்கு வரும் இஸ்லாமியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து வந்து எதிர்ப்பு தெரிவித்தனர். தொழுகை முடிந்த பின்பு பள்ளிவாசல் முன்பாக கூடிய இஸ்லாமியர்கள் பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் மோடி அமித்ஷாவிற்கு எதிராக கண்டனம் முழக்கமிட்டனர். சட்ட திருத்தத்தை வாபஸ் பெரும் வரை போராட்டம் தொடரும் என்றும், ஏப்ரல் 13ஆம் தேதி மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாகவும் தெரிவித்தனர்.
Next Story

