சேலம் சின்னதிருப்பதியில் சாக்கடை கழிவுநீரை பொதுமக்களே அப்புறப்படுத்தும் அவலம்

சேலம் சின்னதிருப்பதியில் சாக்கடை கழிவுநீரை பொதுமக்களே அப்புறப்படுத்தும் அவலம்
X
அந்த பகுதியில் சாலையுடன் கால்வாய் அமைத்து தர கோரிக்கை
சேலம் மாநகராட்சி 12-வது வார்டுக்கு உட்பட்ட சின்னதிருப்பதி பிரபு நகரில் சுமார் 150-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு கடந்த 20 ஆண்டுகளாக 600-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். ஆனால் சாலை, சாக்கடை கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக குண்டும், குழியுமான சாலையில் இரவு நேரங்களில் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் நடந்து செல்ல முடியாமல் அவதிப்படுகிறார்கள். அதேபோல், சாக்கடை கால்வாய் வசதி இல்லாததால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் வீதிகளில் ஆறாக ஓடுவதாகவும் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர். இந்நிலையில், நேற்று குடியிருப்புகள் முன்பு கழிவுநீர் அதிகளவில் தேங்கியதால் அதை அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களே முன்வந்து அடைப்புகளை சரி செய்து கழிவுநீரை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து சின்னதிருப்பதி பிரபு நகரில் வசிக்கும் பொதுமக்கள் கூறியதாவது:- எங்கள் பகுதியில் 150-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு நிலத்தை வாங்கி வீடுகளை கட்டினோம். ஆனால் இதுவரை சாலை மற்றும் சாக்கடை கால்வாய் வசதிகள் இல்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் வீதியில் ஓடுகிறது. இதன் காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட வார்டு கவுன்சிலரிடம் சென்று மனு கொடுத்தோம். அதற்கு மாநகராட்சியில் தற்போது நிதி எதுவும் இல்லை. எனவே, நமக்கு நாமே திட்டத்தில் குடியிருப்புவாசிகள் சேர்ந்து பாதி நிதியை கொடுத்தால் சாக்கடை கால்வாய் கட்டித்தருவதாக கூறினார். சாலையில் தேங்கும் கழிவுநீரில் குழந்தைகள், பெரியவர்கள் நடந்து செல்வதால் நோய் ஏற்பட்டு மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே, தார்சாலை மற்றும் சாக்கடை கால்வாய் வசதி செய்து கொடுக்க மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் பிரபு நகரில் வசிக்கும் மக்கள் அனைவரும் திரண்டு போராட்டத்தில் ஈடுபடவும் முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Next Story