அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க

அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க
X
வருகிற 23-ந் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் கலெக்டர் பிருந்தாதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகளின் கீழ் சேலம் மாவட்டத்தில் செயல்படும் குழந்தைகள் மையங்களில் 196 அங்கன்வாடி பணியாளர்கள் பணியிடம் நிரப்பப்பட உள்ளன. அதேபோன்று 6 குறு அங்கன்வாடி பணியாளர், 215 உதவியாளர் பணியிடங்கள் என மொத்தம் 417 காலிப்பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கான விண்ணப்பங்கள் அந்தந்த வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகங்களில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை www.icds.tn.gov.in என்ற இணையதளத்தில் இன்று (திங்கட்கிழமை) முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். வருகிற 23-ந் தேதி (புதன்கிழமை) மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் குறு அங்கன்வாடி பணியாளர் பணியிடங்களுக்கு 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 25 முதல் 35 வயது வரை உள்ள அனைத்து பெண்களும் விண்ணப்பிக்கலாம். விதவைகள், ஆதரவற்ற பெண்கள், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின வகுப்பை சேர்ந்தவர்கள் 25 வயது முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளி பெண்கள் 25 முதல் 38 வயது வரையிலும், அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்களுக்கு 10 -ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். 20 முதல் 40 வயது வரை உள்ள அனைத்து பெண்கள் விதவைகள், ஆதரவற்ற பெண்கள், தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் வகுப்பினர் 20 முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளி பெண்கள் 20 முதல் 43 வயதிற்குள் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் அறிவிக்கப்பட்டுள்ள கிராமங்களில் உள்ள குழந்தைகள் மையம் அமைந்துள்ள அதே கிராமத்தைச் சேர்ந்தவராகவோ, அதே கிராம ஊராட்சிக்கு உட்பட்ட பிற கிராமத்தை சேர்ந்தவராகவோ, அந்த கிராம ஊராட்சியின் எல்லையின் அருகில் உள்ள அடுத்த கிராம ஊராட்சியை சேர்ந்தவராகவோ இருக்க வேண்டும். மாநகராட்சி, நகராட்சி மற்றும் நகர பஞ்சாயத்துகளில் உள்ள குழந்தைகள் மையம் அமைந்துள்ள அதே வார்டு அல்லது அருகிலுள்ள வார்டுகளை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Next Story