கீச்சாங்குப்பம் மகா காளியம்மன் கோயில் பங்குனி தீமிதி திருவிழா
நாகை கீச்சாங்குப்பம் மஹா காளியம்மன் கோவிலின் பங்குனி தீமிதி திருவிழா, கடந்த 1-ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. நாள்தோறும் அம்பாள், அம்ச வாகனம் மற்றும் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான, பூக்குழி இறங்கும் வைபவம் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. அப்போது, ஆலயத்தில் இருந்து எழுந்தருளிய அம்மன் பூக்குழிக்கு எதிரே உள்ள மணிமண்டபத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதனைத் தொடர்ந்து, கரகம் எடுத்து வந்த பூசாரி பூக்குழியில் இறங்க, அடுத்தடுத்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பக்தி பரவசத்துடன் எலுமிச்சை பழங்களை வானில் வீசி, 2 மணி நேரம் இடைவிடாது தீ மிதித்து நேர்த்திக் கடனை நிறைவேற்றினர். விழாவில், நாகை, காரைக்கால், மயிலாடுதுறை மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Next Story



