சேலத்தில் வரத்து அதிகரிப்பால் பூக்கள் விலை சரிந்துள்ளது.

சேலத்தில் வரத்து அதிகரிப்பால் பூக்கள் விலை சரிந்துள்ளது.
X
குண்டுமல்லி கிலோ ரூ.500-க்கு விற்பனை செய்யப்பட்டது
சேலம் மாவட்டத்தில் வீராணம், பனமரத்துப்பட்டி, கன்னங்குறிச்சி, வாழப்பாடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குண்டுமல்லி, முல்லை, அரளி என பல வகையான பூக்கள் சாகுபடி செய்யப்படுகிறது. விவசாயிகள் தங்களது தோட்டத்தில் பயிரிடப்படும் பூக்களை சேலம் கடைவீதியில் உள்ள வ.உ.சி. பூ மார்க்கெட்டுக்கு கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். பண்டிகை மற்றும் முகூர்த்த நாட்களில் பூக்கள் விலை அதிகரிப்பது வழக்கம். குறிப்பாக குண்டுமல்லி கிலோ ரூ.2,500-யையும் தாண்டி விற்பனையாகும். தற்போது பூக்கள் விளைச்சல் அதிகரிப்பு காரணமாகவும், முகூர்த்த நாட்கள் இல்லாததாலும் அதன் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் ரூ.700 வரை விற்ற குண்டுமல்லி விலை மேலும் சரிந்து இன்று ரூ.500-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் மற்ற பூக்கள் விலையும் குறைந்து காணப்பட்டது. அதாவது கடந்த வாரம் கிலோ ரூ.800-க்கு விற்ற முல்லை இன்று ரூ.500-க்கும், கடந்த வாரம் கிலோ ரூ.400-க்கு விற்ற காக்கட்டான் நேற்று ரூ.300-க்கும் விற்பனையானது. மேலும் மலை காக்கட்டான் கிலோ ரூ.300-க்கும், சம்பங்கி ரூ.120-க்கும், சாதா சம்பங்கி ரூ.160-க்கும், மஞ்சள் அரளி, செவ்வரளி ஆகியவை தலா ரூ.300-க்கும், ஐ.செவ்வரளி ரூ.260-க்கும், நந்தியாவட்டம் ரூ.260-க்கும், சின்ன நந்தியாவட்டம் ரூ.100-க்கும் விற்பனை செய்யப்பட்டது. பூக்கள் விலை குறைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
Next Story