அனைத்து உயிரினங்களும் நலமுடன் வாழ நெகிழிப் பயன்பாட்டை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்

அனைத்து உயிரினங்களும் நலமுடன் வாழ நெகிழிப் பயன்பாட்டை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்
X
அனைத்து உயிரினங்களும் நலமுடன் வாழ நெகிழிப் பயன்பாட்டை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என பசுமை படை மாணவர்கள் மூலம் வைக்கப்பட்டிருந்த கண்காட்சியை அரியலூர் மாவட்ட தொழிலாளர் நல உதவி ஆணையர் பார்வையிட்டார்
அரியலூர், ஏப்.9- அனைத்து உயிரினங்களும் நலமுடன் வாழ நெகிழிப் பயன்பாட்டை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என்றார் அறியலூர் மாவட்ட தொழிலாளர் நல உதவி ஆணையர் ராஜசேகர். அரியலூர் அடுத்த சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில், பசுமைப் படை மாணவர்கள் சார்பில் புதன்கிழமை நடைபெற்ற நெகிழிக்கான மாற்றுப் பொருள் கண்காட்சியை பார்வையிட்டு அவர் பேசியது: நெகிழி பொருள்கள் பயன்பாடு அனைத்து உயிரினங்களுக்கும் தீங்கு விளைவிக்க கூடியது. புற்றுநோய் போன்ற கொடிய நோய்கள் ஏற்பட காரணமாக உள்ளது. நெகிழிப் பொருள்களை பயன்படுத்துவதால் பூமியின் நிலத்தடி நீர்மட்டம் குறைகிறது. அது மக்குவதற்கு 100 முதல் 1000 ஆண்டுகள் வரை எடுத்துக் கொள்கிறது . எனவே ஒவ்வொரு மாணவரும் தங்கள் வீட்டிலும் அருகாமையில் உள்ள வீட்டிலும் முடிந்தவரை நெகிழி பைகள் மற்றும் பொருள்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். பொருள்கள் வாங்க கடைக்குச் செல்லும் ஒவ்வொருவரும் துணிப்பை கொண்டு சென்று பொருள்களை வாங்க வேண்டும். பூமியை அடுத்த தலைமுறையிடம் பத்திரமாக ஒப்படைக்கும் பொறுப்பு மாணவர்களிடம் உள்ளது. எனவே மாணவர்கள் நெகிழி பயன்பாட்டை முற்றிலும் தவிர்த்து மனிதர்கள் மட்டுமல்ல அனைத்து உயிரினங்களும் நிம்மதியாக வாழ வழிவகை செய்ய வேண்டும் என்றார். பின்னர் பல்வேறு போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுப் பொருள்களை வழங்கினார். கண்காட்சியில் மரக்கரண்டிகள், பாக்குமட்டை, தட்டு, கண்ணாடி குவளை, மூங்கில் தேநீர் குவளை, மூங்கில் குடிநீர் குவளை, மண் பானைகள், மண் குவளைகள், பனை ஓலை பெட்டி, பனை ஓலை விசிறி, ஸ்டீல் குடிநீர் பாட்டில், காகிதப் பை, துணிப்பை, காகித உறிஞ்சி குழாய் உள்ளிட்டப் பொருள்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் சின்னதுரை தலைமை வகித்தார். ஆசிரியர்கள் செந்தமிழ் செல்வி, தனலட்சுமி, செந்தில்குமரன், வெங்கடேசன், பாலமுருகன், அபிராமி, அந்தோணிசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். :
Next Story