கோவை:சாமியார் வேடத்தில் பதுங்கியிருந்த கஞ்சா குற்றவாளி கைது!

கோவை:சாமியார் வேடத்தில் பதுங்கியிருந்த கஞ்சா குற்றவாளி கைது!
X
கோவை வெள்ளியங்கிரி கோவிலில் பதுங்கி இருந்த கஞ்சா குற்றவாளி கைது.
போதைப் பொருள் வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த குற்றவாளி, கடந்த இரண்டு ஆண்டுகளாக கோவை வெள்ளியங்கிரி அடிவாரத்தில் சாமியார் வேடத்தில் பதுங்கியிருந்த நிலையில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தரின் உத்தரவின் பேரில், நீதிமன்றங்களில் ஆஜராகாத தலைமறைவு குற்றவாளிகளை பிடிக்கும் நடவடிக்கையில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கோவை காட்டூர் காவல் நிலையத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு பதிவான போதைப் பொருள் தடுப்பு வழக்கில் அன்னூரைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்துள்ளார். அவருக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்த நிலையில், காவல்துறையினர் அவரை தீவிரமாக தேடி வந்தனர். இதனிடையே, மணிகண்டன் கோவை வெள்ளியங்கிரி அடிவாரப் பகுதியில் பதுங்கியிருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக அங்கு விரைந்த காவல்துறையினர், சாமியார் வேடத்தில், கழுத்தில் மாலைகளுடன் இருந்த மணிகண்டனை அங்கிருந்த சாமியார்களுடன் மறைந்திருந்த நிலையில் கண்டுபிடித்தனர். இதையடுத்து, காவல்துறையினர் மணிகண்டனை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story