பார் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து காலி மதுபாட்டில்களை மாலையாக அணிந்து வந்த வாலிபர் சங்க நிர்வாகி

X
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சேலம் கிழக்கு மாநகர தலைவர் கோபிராஜ் தலைமையில் நிர்வாகிகள் சிலர் சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். இதில் ஒருவர் காலி மதுபாட்டில்களை கழுத்தில் மாலையாக அணிந்து கொண்டு வந்தார். சிலர் காலி மதுபாட்டில்களை கையில் கொண்டு வந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர்களை கலெக்டர் அலுவலக நுழைவுவாயிலில் போலீசார் தடுத்து நிறுத்தி காலி மதுபாட்டில்களை வாங்கி கொண்டனர். இதுகுறித்து வாலிபர் சங்கத்தினர் கூறும் போது, ‘உடையாப்பட்டி மின்வாரிய அலுவலகம் அருகே டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. இதை அகற்ற வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை விடுத்து வருகிறோம். இந்த நிலையில் அங்கு மேலும் ஒரு தனியார் மது பார் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு பெரிதும் பாதிப்பு ஏற்படும். ஏற்கனவே உள்ள டாஸ்மாக் கடையை அகற்றுவதுடன் இந்த பார் அமைப்பதையும் தடுக்க வேண்டும் என்றனர். பின்னர் அவர்கள் தங்களது கோரிக்கை மனுவை கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகளிடம் கொடுத்தனர்.
Next Story

