கோவை: வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் கைது !

கோவை: வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் கைது !
X
சிறையில் இருந்து விடுதலையாகி வெளியே வந்த இருவர் மீண்டும் வழிபறி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவை மத்திய சிறையிலிருந்து கடந்த வாரம் விடுதலையான ரத்தினபுரியைச் சேர்ந்த அம்புரோஸ் (28) மற்றும் லாரன்ஸ் (27) ஆகிய இருவர் வழிப்பறியில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் இரவு ரத்தினபுரி தில்லை நகரைச் சேர்ந்த கவுதம் (29) என்பவர் வேலை முடிந்து வீட்டிற்கு நடந்து சென்றுகொண்டிருந்தபோது, அவ்வழியாக ஸ்கூட்டரில் வந்த அம்புரோஸ் மற்றும் லாரன்ஸ் ஆகியோர் அவரது செல்போனைப் பறித்துச் சென்றனர். கவுதம் கூச்சலிடவே அவர்கள் ஸ்கூட்டரில் தப்பிச் சென்றனர். இதுகுறித்து கவுதம் அளித்த புகாரின் பேரில் ரத்தினபுரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், செல்போனைப் பறித்துவிட்டு வேகமாகச் சென்ற ஸ்கூட்டர் சங்கனூர் மேம்பாலத்தில் தடுப்புச் சுவரில் மோதியதில் அம்புரோஸ் மற்றும் லாரன்ஸ் ஆகிய இருவரின் கால்களும் முறிந்தன. அவர்களை மீட்ட பொதுமக்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில், காயமடைந்தவர்கள் கவுதமிடம் செல்போனைப் பறித்தவர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து, ரத்தினபுரி போலீசார் மருத்துவமனைக்குச் சென்று இருவரையும் நேற்று கைது செய்தனர். விசாரணையில், அம்புரோஸ் மீது 9 வழக்குகளும், லாரன்ஸ் மீது 10 வழக்குகளும் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. இருவரும் திருட்டு வழக்கில் கைதாகி கடந்த வாரம்தான் சிறையிலிருந்து வெளியே வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story